Skip to content

போராட்டக் களமாக மாறிய சத்தியமூர்த்தி பவன்; செல்வப்பெருந்தகை தயாரித்துள்ள வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு!

சென்னை,ஏப்.02: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், வேட்பாளர்களை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

வேட்புமனு தாக்கல் முடிவடைய சில நாட்களே உள்ளன!

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே (விடுமுறை நாட்கள் தவிர்த்து) உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது.

வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரம் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

28 தொகுதிகள்: தொண்டர்களிடையே அதிருப்தி

திமுக கூட்டணியில் கடந்த முறை 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 40 தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் பிடிவாதம் காட்டினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, ப.சிதம்பரம் தலையீட்டால் செல்வப்பெருந்தகை 28 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்தார். இது அதிக தொகுதிகளை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் தேர்வில் ‘பதவிச் சண்டை’

செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அனுப்பிய வேட்பாளர் பட்டியலில், தனது ஆதரவாளர்கள் 20 பேருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் போன்ற முன்னாள் தலைவர்கள் மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் தங்களின் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர்.

சத்தியமூர்த்தி பவனில் தீக்குளிப்பு முயற்சி

வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக நேற்று (ஏப்ரல் 1, புதன்) சத்தியமூர்த்தி பவனில் போராட்டங்கள் வெடித்தன. சேவாதள காங்கிரஸ் தலைவர் குங்ஃபூ விஜயன் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் ஆகியோருக்கு வாய்ப்பு கோரி அவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லெட்சுமி என்ற பெண் தொண்டர் திடீரென தன் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணிக்கம் தாகூர் பதவி விலகல்; உச்சக்கட்ட பரபரப்பு

உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை குழுத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பியுள்ளார். இந்த அதிரடி முடிவு கட்சி மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி எடுக்கும் முடிவு என்ன?

தொடர் போராட்டங்கள் மற்றும் புகார்கள் காரணமாக டெல்லியில் நடைபெறவிருந்த வேட்பாளர் தேர்வுக் கூட்டம் தள்ளிப்போயுள்ளது. இன்று மீண்டும் நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும். செல்வப்பெருந்தகையின் தலைமைக்கு எழுந்துள்ள இந்தச் சவாலை காங்கிரஸ் மேலிடம் எப்படி கையாளப்போகிறது என்பதே இப்போதைய கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *