Skip to content

மகளிர் உரிமைத் தொகை: மே மாதத்திற்கான ரூ.1000 வரவு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை,மே.15; தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

அதன்படி, ஆட்சிக்கு வந்த திமுக 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி (அண்ணா பிறந்தநாளன்று) மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியது.

1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000

அந்த வகையில், 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனாளிகளாக கண்டறியப்பட்டு மாதந்தோறும் 15ஆம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தேர்தலைக் காரணம் காட்டி முன்கூட்டியே 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக தேர்தல் காலத்தின் போது, சிறப்புத் தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000-ஐ மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் திமுக அரசு வரவு வைத்தது.

தவெக ஆட்சிக்கு வந்தால் ரூ.2,500 என தேர்தல் வாக்குறுதி

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பின்னர் தேர்தலில் தவெக வென்று ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்ட முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எதனையும் நிறுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சியான திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று முதலமைச்சர் விஜய்யும் உறுதியளித்தார்.

மே மாத தொகை விரைவில் வரவு எனக் கூறியிருந்தார், விஜய்

இதுபோன்ற சூழலில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வருமா? அல்லது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.
இதுபோன்ற சூழலில், நேற்று (மே 14, வியாழன்) அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், “பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.”

“எனவே, இம்மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
திட்டத்தை செம்மைப்படுத்தவும், தகுதியான பயனாளர்களை முறையாக வகைப்படுத்தவும் இந்த அவகாசம் தேவைப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொதுவெளியில் பேச்சு; சமூகவலைதளங்களில் வசை

இதனால், மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? என்பது குறித்து பொதுவெளியில் சந்தேகம் எழுந்தது. சமூக வலைதளங்களில் தவெக அரசை விமர்சித்து கருத்துகள் பதிவிடப்பட்டன.
மே மாதத்திற்கான தொகையை கொடுத்துவிட்டு, திட்டத்தை செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாமே என்கிற ரீதியிலும் பேசப்பட்டது.

மே மாத மகளிர் உரிமைத்தொகை வரவு

இதன் தொடர்ச்சியாக, இம்மாதத்திற்கான (மே, 2026) மகளிர் உரிமைத் தொகை இன்றைய தினம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் பெண்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர்.

முன்னதாக, அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,000 உதவித்தொகை மாணவ-மாணவியரின் வங்கி கணக்கில் தவெக அரசால் நேற்று வரவு வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *