திருச்சி,ஏப்.05; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களத்தில் அனல் பறக்கின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் நாலாபுறமும் சென்று தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.
அனைத்து வலிகளையும் தாங்கியதாக விஜய் பேச்சு
அப்போது பேசிய அவர், “அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், விஜய்யின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
விஜய்யின் ‘வலி’ குறித்து சீமான் அடுக்கடுக்காக கேள்வி
அதற்கு அவர், “வலி என்றால் எதைச் சொல்கிறார்? 840 மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அந்த வலியா? ஆந்திரக் காடுகளில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களே அந்த வலியா? அல்லது 450 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்களே அந்த வலியா? ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்களே அந்த வலியையா இவர் தாங்கினார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஈழத் தமிழர்கள் மற்றும் சொந்தப் போராட்டங்கள்
மேலும் ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து சுட்டிக்காட்டிய சீமான், “2008-09 காலகட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த வலியை விஜய் தாங்கினாரா? என் மீது 262 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் போகாத நீதிமன்றம் இல்லை, சிறை இல்லை. 14 ஆண்டுகளாக எனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து என்னை எங்கும் செல்ல விடாமல் தடுத்தார்கள். இவைதான் உண்மையான வலிகள்” என்று குறிப்பிட்டார்.
தலைவன் என்பவன் யார்?
“படம் (ஜனநாயகன்) வெளியாகவில்லை என்பது உங்கள் (விஜய்) தனிப்பட்ட வலி. சொந்த வலியைச் சொல்வது மக்களுக்கான அரசியல் இல்லை. மக்களின் வலியைச் சுமந்து அதற்குத் தீர்வு காண்பவனே உண்மையான தலைவன்” என்று விஜய்யின் அரசியல் வருகையைச் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
சீமானின் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா விஜய்?
தமிழ்நாடு தேர்தல் களத்தில் விஜய் குறித்து சீமான் எழுப்பியுள்ள கேள்விகள் சமூகவலைதளங்களிலும் பொதுவெளியிலும் பேசுபொருளாகி உள்ளன. மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பேசுபவர் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் வாக்காளர்கள் உள்ளனர்.
