சென்னை,ஏப்.01; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடும் சின்னம் குறித்த குழப்பமும்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு இம்முறை 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடக்கத்தில், இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழியில் (தனி) தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட மதிமுக திட்டமிட்டிருந்தது. இது குறித்து அக்கட்சித் தொண்டர்களிடையே பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தன.
வைகோ எடுத்த இறுதி முடிவு
இந்நிலையில், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோனை நடத்திய பிறகு, வைகோ இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்:
மொடக்குறிச்சி – செந்தில்நாதன்
மதுரை தெற்கு – எம். பூமிநாதன்
கடையநல்லூர் – டி.எம். ராஜேந்திரன்
சீர்காழி (தனி) – செந்தில் செல்வன்
முதலில் சீர்காழி தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று இருந்த முடிவை மாற்றி, தற்போது அங்கும் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காண்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் பின்னணி என்ன?
தனிச் சின்னத்தை கேட்டுப் பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பரப்புரையில் ஈடுபடுவது கடினமாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆளுங்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. இதன்படி 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவின் முடிவால் கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தும்
மதிமுகவின் இந்த முடிவு திமுக கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2021 தேர்தலிலும் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் நின்று 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போன்றதொரு வெற்றியை 2026 தேர்தலிலும் பதிவு செய்ய அக்கட்சித் தொண்டர்கள் தற்போது உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.
