சென்னை,மார்ச்.25; வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்விரண்டு கட்சிகளுக்கும் முந்தைய தேர்தலைவிட தலா ஒரு தொகுதி குறைத்து வழங்கப்பட்டிருக்கிறது.
2021 தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் வென்றது!
திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனாலும், 2021 தேர்தலில் வென்ற அதே தொகுதிகள் மீண்டும் கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
வரும் தேர்தலில் தொகுதிகள் குறைந்ததால், காம்ரேடுகளுக்கு சிக்கல்
அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை குறைந்ததால் இந்த முறை மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிட முடியாத சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடுதல் தொகுதிகளை, திமுகவிடம் கேட்டு வந்தது. ஆனால் திமுகவோ, கடந்த முறை போட்டியிட்டதைவிட ஒரு தொகுதியை குறைத்து வழங்கி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.
கொள்கைக்காக 5 தொகுதிகளை ஏற்பதாக மா.கம்யூ. அறிவிப்பு
முதலில் முரண்டுபிடித்த மார்க்சிஸ்ட் கட்சி, எண்ணிக்கையை விட்டுக் கொடுக்கலாம், கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற அடிப்படையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு தங்கள் நிலைப்பாடு சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக திமுக தலைமை வழங்கிய 5 தொகுதிகளை பெற்றுக்கொண்டது.
தொகுதிகள் எண்ணிக்கை குறைந் துள்ளதால் மதுரை மாவட்டத்தில் இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது சந்தேகம் என்றும், கடந்த முறை மார்க்சிஸ்ட் போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில் இம்முறை திமுகவே களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை, கோவை, சென்னையில் தலா ஒரு தொகுதிக்கு குறி
2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மதுரை, கோவை, சென்னையில் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மதுரையில் ஒரு தொகுதியை பெற்றே தீர காம்ரேடுகள் உறுதி
எக்காரணம் கொண்டும் மதுரையில் போட்டியிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்க்காது. கடந்த முறை பெற்ற ஒரு தொகுதியை பெற்றே தீருவோம். அது எந்த தொகுதி என உறுதியாகவில்லை, என்று கூறுகின்றனர்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே எம்எல்ஏ-க்கள் உள்ள 2 தொகுதிகள், மீதமுள்ள தொகுதிகளை மற்ற மாவட்டங்களில் வழங்குவதற்கு கட்சித்தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் போட்டியிடுவது சந்தேகமே என திமுகவினர் கூறுகின்றனர்.
