மதுரை வடக்கு தொகுதி (எண் – 191)
மதுரை வடக்கு தொகுதி, மறுசீரமைப்பின்போது கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மூன்று முறை தேர்தலைச் சந்தித்துள்ள இத்தொகுதியில், அதிமுக இரண்டு முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளது.
மதுரை வடக்கு தொகுதியில் முக்குலத்தோர், யாதவர், பட்டியலினத்தவர் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.
முக்குலத்தோர் 35 சதவீதமும், யாதவர் மற்றும் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் தலா 15 சதவீதமும் உள்ளனர். இவர்கள் தவிர நாயுடு, வெள்ளாளர், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர்.
அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கு தொகுதியில் ஒரு கண்!
வரும் தேர்தலில், இத்தொகுதியில் திமுகவில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் சோமசுந்தரம், பொன் சேது, அக்ரி கணேசன் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.
ஆனால், மாநகரச் செயலாளர் என்கிற அடிப்படையில் தற்போதைய எம்எல்ஏவான கோ. தளபதியே மீண்டும் போட்டியிட வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகிறது.
அதேவேளையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கார்த்திகேயனும் சீட் கேட்பதாகத் தெரிகிறது.
அதிமுகவில் மருத்துவர் சரவணனுக்கு மீண்டும் சீட்?
அதிமுக கூட்டணியில் மருத்துவர் சரவணனுக்கு சீட் கிடைக்கும் எனப் பேசிக் கொள்கின்றனர்.
இவர், 2019ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
ஆனால், 2021 தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த சரவணன், கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
தேர்தலில் திமுகவின் கோ. தளபதியிடம் சுமார் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். பின்னர் சரவணன் பாஜகவிலிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தார்.
கூட்டணி கட்சியான காங்கிரசை விமர்சித்த திமுக எம்எல்ஏ தளபதி
அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய இத்தொகுதியின் எம்எல்ஏ கோ. தளபதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸை சற்று கடுமையாக விமர்சித்தார்.
இதனால் இரு கட்சியினரிடையே கடும் சொற்போர் மூண்டது. இந்தத் தொகுதியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் முட்டி மோதுகிறது.
காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டியால் சலசலப்பு
இங்கு காங்கிரஸ் போட்டியிடும் என்கிற ரீதியில் அக்கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி தொகுதி முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக – காங்கிரஸ் கூட்டணியே நிச்சயமற்ற தன்மையில் இருப்பதால், தொகுதி பற்றி முன்கூட்டியே கணிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த விவகாரம் அடங்கிப் போகுமா அல்லது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என திமுகவினர் உறுதி
எக்காரணம் கொண்டும் இத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று, திமுகவினர் உறுதிபடக் கூறி வருகின்றனர்.
தொகுதியில் திமுக மீண்டும் போட்டியிடும் பட்சத்தில், அக்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.
