காஞ்சிபுரம்,மார்ச்.31; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதில் முதலாவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25ஆம் தேதி மயிலாப்பூரில் பரப்புரையை தொடங்கினார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றார்.
மயிலாப்பூரில் இபிஎஸ்-உடன் தமிழிசை பங்கேற்றார்!
மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசைக்கு சீட் கிடைக்கும் எனக் கூறப்படுகின்ற போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதுதவிர, அதிமுக களம்காணும் தொகுதிகளில் ஏதாவது ஒன்றிலிருந்து பரப்புரையைத் தொடங்காமல், பாஜக போட்டியிடும் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கியது ஏன் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பரப்புரையை தொடங்கினார் உதயநிதி
இதுபோன்ற சூழலில் தேர்தல் பரப்புரைக்காக காஞ்சிபுரம் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திற்குச் சென்றார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பரப்புரையைத் தொடங்கினார்.
பின்னர் தேரடி அருகே பேசிய அவர், இப்போது நடக்கும் தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்; மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை; தமிழ்நாடு என்ற பெயர்கூட அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்று விமர்சித்தார்.
மயிலாப்பூரில் இபிஎஸ் பரப்புரை தொடங்கியது ஏன்?
அண்ணா பிறந்த இந்தக் காஞ்சிபுரத்தில் இருந்து நான் எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறேன்; அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரிலிருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளார்;
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது பரப்புரையை எங்கிருந்து தொடங்கினார் தெரியுமா? பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் இருந்துதான் அவர் தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கியுள்ளார். நமக்குக் கொள்கைத் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி என்றால் அவருக்குக் (எடப்பாடி பழனிசாமி) கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித் ஷாவும் தான் என்று உதயநிதி பேசினார். அதனால் தான் அவர் தனது பரப்புரையை பாஜக போட்டியிடும் மயிலாப்பூரிலிருந்து தொடங்கினார்.
“தமிழ்நாடு விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் பாஜக”
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தமிழக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜகவிற்கும் நடக்கும் போராட்டம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், சமூக நீதியைக் காக்கவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
