Skip to content

நீட் மாணவி தற்கொலை விவகாரம்; கல்வி முறையை மோடி அரசு சீரழித்துவிட்டதாக ராகுல் காந்தி சாடல்!

மவ்கஞ்ச்,ஜூன்.05; நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி அகான்க்ஷா சதுர்வேதி நாக்பூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் கல்வி முறை முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்

மத்திய பிரதேசத்தின் மவ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த அகான்க்ஷா, மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தங்கி பயிற்சி மையத்தில் படித்து வந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தை, கிசான் கிரெடிட் கார்டு மூலம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும், நாக்பூரில் சமையல்காரராக வேலை பார்த்தும் அகன்க்ஷாவின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் (UG) தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே மாணவியின் இந்த தீவிர முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மாணவி அகான்ஷா உயிரை மாய்த்துக் கொண்டு ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர் எழுதிய தற்கொலை குறிப்பு தற்போது அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. அதில், நீட் தேர்வை எதிர்கொள்ளும் துணிச்சல் தனக்கு இல்லை என்று மாணவி அகான்ஷா குறிப்பிட்டுள்ளார்.

“இது தற்கொலை அல்ல, கல்வி அமைப்பின் படுகொலை”: ராகுல்

இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பின்வருமாறு தெரிவித்துள்ளார்:”ஒரு தந்தை ஒரு மனிதனால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார். ஆனால், நீட் வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் அகன்க்ஷா நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அகான்க்ஷாவின் மரணம் ஒரு தற்கொலை அல்ல; அது பிரதமர் மோடியின் கீழுள்ள ஊழல் நிறைந்த, உடைந்த கல்வி முறையின் கொடூரமான விளைவு” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, “ஆட்சி என்பது நிரந்தரமானது அல்ல, அது வரும் போகும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் கல்வி முறையை பாழாக்கியதற்கு இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையும் தற்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

இந்தியாவின் கல்வி முறையை வேரோடு சீரமைப்பது அவசியம்

தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் இந்திய போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ (CBI) விசாரித்து வரும் நிலையில், வரும் 21ஆம் தேதியன்று மறுதேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், முறையான சீர்திருத்தங்கள் இல்லாத தற்காலிக விசாரணைகளும், குழுக்களும் மாணவர்களின் உயிரைக் காக்கப் போவதில்லை. இந்தியாவின் கல்வி முறையை வேரோடு சீரமைத்து, மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பதே தற்போதைய அவசரத் தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *