Skip to content

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 முறை வென்ற திண்டுக்கல் தொகுதி! திண்டுக்கல் சீனிவாசனின் தனிப்பட்ட செல்வாக்கால் முந்துகிறது அதிமுக!

திண்டுக்கல் தொகுதி (எண் – 132)

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி, 1952 தொடங்கி இதுவரை 16 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், அதிமுக  4 முறையும், திமுக, நிறுவன காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்  செயலாளர் என்.வரதராஜன் ஒரு முறை கட்சி சார்பிலும், மற்றொரு முறை சுயேச்சை வேட்பாளராகவும் வென்றுள்ளார்.

அதே கட்சியின் மூத்த தலைவர் கே.பாலபாரதி, இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானார்.

திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரையில், பிள்ளைமார், வன்னியர் மற்றும் இஸ்லாமியர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.  இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவர், நாயுடு, சௌராஷ்டிரா சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.

அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏவான  மறவர் சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சீட் கேட்கிறார்.  மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜசேகரனும் சீட் கேட்பதாக பேசப்படுகிறது.

திமுகவில், திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமார், கிழக்கு ஒன்றியப் பொருளாளர் வெள்ளிமலை ஆகியோர் சீட் பெற காய் நகர்த்துகின்றனர்.

திமுக கூட்டணியில், கடந்த தேர்தலில் தோற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம். பாண்டியும் சீட் கேட்பதாக தெரிகிறது.

2021 தேர்தலில் சுமார்  15,000 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியும், புதிதாக வந்துள்ள விஜய்யின் தவெகவும் குறிப்பிடத்தக்க சேதாரத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.

இவற்றையும் தாண்டி திண்டுக்கல் சீனிவாசனின் தனிப்பட்ட செல்வாக்கால் அதிமுக முந்துவதாக பேசிக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *