Skip to content

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன? பெண்களுக்கு காத்திருக்கும் இனிப்பான செய்தி!

சென்னை,மே.05; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும், வேறு சில கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“விஜய்யின் முதல் கையெழுத்து எந்தத் திட்டத்திற்காக இருக்கும்?”

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பெண்களைக் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் மிக முக்கியமானது, “மகளிர் உரிமைத் தொகை”. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அவர்கள் 60 வயது எட்டும் வரை, மாதம் ரூ.2,500 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் இந்தத் திட்டத்தில் விஜய் முதல் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்

விலைவாசி உயர்வால் தவிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்கான முழுத் தொகையையும் அரசே ஏற்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் (வெற்றிப்பயணம்)

தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். நகர மற்றும் மாநகரப் பேருந்துகள் மட்டுமின்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் “வெற்றிப்பயணம்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தாய்மாமன் சீர் பெட்டகம் மற்றும் திருமண உதவி

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், பெண்களின் திருமணத்திற்கும் தவெக முக்கியத்துவம் அளித்துள்ளது:

தாய்மாமன் சீர்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘சீர் பெட்டகம்’ வழங்கப்படும்.

திருமண உதவி: 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்துப் பெண்களுக்குத் திருமணத்தின் போது 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.

கல்வி மற்றும் வீடு வழங்கும் திட்டம்

மாணவர்களின் கல்விக்காக, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்பதும் விஜய்யின் முக்கிய இலக்காக உள்ளது.

முதலமைச்சரானதும் எடுக்கப்போகும் முதல் முடிவென்ன?

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் விஜய் எடுக்கப்போகும் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழ்நாடே காத்திருக்கிறது. மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அதிரடி அறிவிப்பு வருமா அல்லது மகளிருக்கான நிதி உதவித் திட்டமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும், தவெக-வின் இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *