Skip to content

முதல் மரியாதை தந்தவருக்கு இறுதி மரியாதை; கண்ணீர்க் கடலில் தமிழ்த் திரையுலகம்!

“என் இனிய தமிழ் மக்களே…” என்று இருகைகளையும் கூப்பி, கம்பீரமான குரலுடன் திரையில் நிழற்பட பிம்பமாகத் தோன்றிய இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் இன்று (ஜூன் 10, 2026) காலமானார். அவருக்கு வயது 84.

1977ஆம் ஆண்டு ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. சின்னசாமி என்ற இயற்பெயரை சினிமாவுக்காக பாரதிராஜா என மாற்றிக் கொண்ட அவர், 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.

டைட்டிலில் கதாபாத்திரங்களின் பெயரை போட்டு புரட்சி!

டைட்டிலில் நடிகர், நடிகர்களின் பெயர்களை போடும் வழக்கத்தை மாற்றி, அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்களை 16 வயதினிலே டைட்டிலில் போட்டு திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர், பாரதிராஜா.

ஊர்க்குருவியாக படப்பிடிப்பு அரங்குகளுக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

படங்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தாலே கவிதை போல் இருக்கும்

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘வேதம் புதிது’, ‘என் உயிர் தோழன்’, நாடோடித் தென்றல் என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.

பாரதிராஜா படங்களின் பெயர் பட்டியலை வாசித்தாலே ஒரு கவிதை புத்தகம் வாசித்தது போன்ற உணர்வு ஏற்படும். மூக்கால் நுகரக்கூடிய கிராமத்து மண்வாசனையை, திரையின் வழியே ரசிகர்களின் மனதால் நுகரவைத்த அற்புதம் நிகழ்த்திய படைப்பாளி.
கல்லுக்குள் ஈரம் போல் கள்ளம் கபடமற்ற கிராமத்து மக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியலை தன் திரைப்படங்களில் கொட்டித் தீர்த்துவிட்ட வெள்ளந்தி மனசுக்காரர்.

பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளைப் பெற்றவர் பாரதிராஜா

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே. அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.

திரையுலகம் கண்ணீர்; முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாரதிராஜாவின் உடலுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் அறிவிப்பு

பின்னர் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் இறுதி அஞ்சலி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்” என மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *