கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி ரசிகர்களின் ஏமாற்றம் மற்றும் வன்முறையில் முடிந்தது. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில் அரங்கேறிய 5 முக்கிய அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
1. மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட ₹89 கோடி ஊதியம்
இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் சதத்ரு தத்தா, காவல்துறையின் சிறப்பு விசாரணை குழுவிடம் அளித்த வாக்குமூலத்தில், மெஸ்ஸிக்கு இந்திய வருகைக்காக ₹89 கோடி ஊதியமாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான வரியாக மட்டும் ₹11 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஒரு நிகழ்விற்காக சுமார் ₹100 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2. ரசிகர்களைத் தொட அனுமதித்ததால் மெஸ்ஸி அதிருப்தி
மைதானத்தில் மெஸ்ஸி மிகவும் அதிருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்பு விதிகளை மீறி விஐபிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரைத் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும் மெஸ்ஸி விரும்பவில்லை. “தன்னை யாரும் தொடக்கூடாது” என்ற நிபந்தனையுடன்தான் அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் மைதானத்தில் அது மீறப்பட்டதால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
3. அனுமதி அட்டைகளில் நடந்த முறைகேடு
முதலில் மைதானத்திற்குள் நுழைய 150 பேருக்கு மட்டுமே ‘கிரவுண்ட் பாஸ்’ வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரு செல்வாக்குமிக்க நபரின் அழுத்தத்தினால் இந்த எண்ணிக்கை 450-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் மைதானத்தின் பாதுகாப்பு வளையம் உடைந்து, மெஸ்ஸியைச் சுற்றி பெரும் கூட்டம் கூடியது.
4. ஏமாற்றமடைந்த ரசிகர்கள் – வன்முறை வெடித்தது
₹5,000 முதல் ₹25,000 வரை டிக்கெட் கொடுத்து மெஸ்ஸியைப் பார்க்க வந்தஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மைதானத்தில் மெஸ்ஸி வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். விஐபிக்கள் அவரை மறைத்துக் கொண்டதால், கேலரியில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்தும், பாட்டில்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
5. முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள்
இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ₹20 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைத்த பணத்தில் முறைகேடு நடந்ததா என விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மெஸ்ஸிக்கு கசப்பான அனுபவமாக மாறிய கொல்கத்தா விசிட்..!
கால்பந்து ரசிகர்களின் சொர்க்கமாக கருதப்படும் கொல்கத்தாவில், மெஸ்ஸியின் வருகை ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்க வேண்டியது. ஆனால், முறையற்ற மேலாண்மை மற்றும் விஐபி கலாச்சாரத்தால் அது ஒரு கசப்பான அனுபவமாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டாலும், அவர்களின் ஏமாற்றத்தை ஈடு செய்ய முடியாது என்பதே உண்மை.
