Skip to content

மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் – தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி!

சென்னை, டிச.13; காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேகதாது விவகாரம்; தமி்ழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்ததாகக் கருதி, கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இதற்குப் பதிலடியாக, 11.12.2025 அன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மேலும், 9.12.2025 அன்று மத்திய நீர்வளக் குழுமத்திடமும் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவில், 16.02.2018 அன்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் இது என்று தமிழக அரசு மறுசீராய்வு மனுவில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் நியாயமானது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் எழுந்தபோதே, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சருக்குச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் தொடர் யுக்திகளும், தமிழகத்தின் எதிர்ப்பும்

மேகதாதுவில் புதிய அணையைக் கட்டுவதற்காக கர்நாடக அரசு பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது. மத்திய நீர்வளத் துறையிடமும், சுற்றுச்சூழல் துறையிடமும் அனுமதி கோரியது.

மத்திய சுற்றுச்சூழல் துறை விரிவான அறிக்கையைக் கேட்டிருந்தது. இந்த அறிக்கையை விவாதப் பொருளில் சேர்க்க காவிரி ஆணையக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டபோது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பால் அது ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் வாக்கெடுப்பு நடந்தபோது, தமிழக அரசின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து அதை முறியடித்தனர். இதையடுத்து, மேகதாது அணைக்கான அறிக்கையை விவாதிக்கக் காவிரி ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில் தமிழக அரசு எதிர்த்து வாதிட்டும், காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழகத்திற்கான அநீதி என்று சங்கம் கருதுகிறது.

அணை கட்டுமான நடவடிக்கைகள் தீவிரம்

காவிரி ஆணையமும், மத்திய அரசின் ஜல் சக்தி துறையும் இதற்குச் சாதகமாக இருப்பதாக உணர்ந்ததால், இந்தத் தீர்ப்பை அணை கட்டுமானத்துக்கான அனுமதியாகக் கருதி கர்நாடக அரசு அதன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி, கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அணை கட்டுமானப் பணிகளுக்காக 30 பேர் கொண்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல்பாட்டை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கர்நாடக இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிலைய இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கான கருத்துருவைக் கொடுக்கவும் கர்நாடகம் தயாராக உள்ளது. விவாதம் தானே என்று அலட்சியமாக இருந்தால், இந்த முதல் கட்ட நடவடிக்கைகளே கர்நாடகத்துக்குச் சாதகமான நிலையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று சங்கம் எச்சரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *