சென்னை,மே.31; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் திருப்பங்களையும் விறுவிறுப்பையும் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக நிலையான ஆட்சியை அமைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களை வென்ற த.வெ.க-வுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்தன. இந்த அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கட்சித் தாவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக நோக்கி நகரும் அதிமுக எம்எல்ஏக்கள்
47 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். இது அதிமுக தலைமைக்கு விழுந்த பேரிடியாகப் அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். தற்போது, மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் வாரத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைய முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்எல்ஏக்களைத் தடுக்க எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?
கட்சித் தாவல் மற்றும் தொடர் ராஜினாமாவால் அதிர்ந்து போயுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஞ்சிய எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கவும், கட்சி மாறியவர்களுக்குப் பாடம் புகட்டவும் சில முக்கிய உத்திகளைக் கையாண்டு வருகிறார்:
ஆளுநரிடம் புகார்: த.வெ.க தரப்பில் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சி) நடப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர். இது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களை தக்க வைக்க இபிஎஸ் திட்டம்
மன்னிப்புக் கடித உத்தி: த.வெ.க-வுக்கு ஆதரவளித்த 25 பேர் குழுவில் இருந்த 21 எம்.எல்.ஏ.க்கள் (சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர) எடப்பாடி பழனிசாமியிடம் தங்களை மன்னிக்குமாறு தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களை மன்னித்து பதவியில் தொடர அனுமதிக்கலாம் என பேரவை விதியைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் எஞ்சிய 21 பேரைக் கட்சிக்குள்ளேயே தக்கவைக்க திட்டமிட்டுள்ளார்.
நீதிமன்ற சட்டப் போராட்டம்: ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வுக்குச் சென்ற 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக அரசியல் செய்யக் கூடாது என்பதால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, எப்போதும் சட்ட ரீதியான நெருக்கடியைக் கொடுக்க அதிமுக சட்டப்பிரிவு முடிவு செய்துள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு கண்டிராத அரசியல் காட்சிகள்
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தேர்தலுக்குப் பிந்தைய இந்த எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுதல் மற்றும் ராஜினாமாக்கள் த.வெ.க அரசுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தாலும், அதிமுகவின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஒருபுறம் சமாதானக் கடிதம், மறுபுறம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் என இரட்டை உத்திகளைக் கையாண்டு, தனது கோட்டையைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி போடும் கணக்குகள் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
