Skip to content

ராமதாஸ் – சசிகலா அதிரடி கூட்டணி; அதிர்ச்சியில் உறைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி!

திண்டிவனம்,மார்ச்.21; தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் வி.கே. சசிகலா (அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் – AIPTMMK) ஆகியோர் கைகோர்த்துள்ளனர். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் சசிகலாவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம்” என்று அறிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

கடந்த சில நாட்களாக பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தது பாஜக மற்றும் அதிமுக தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாவட்டங்களில் பலமாக உள்ள பாமக மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள சசிகலா இணைவது, மற்ற பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

234 தொகுதிகளிலும் போட்டி

இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. “இந்தக் கூட்டணி தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும், பல கட்சிகள் எங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன” என்று ராமதாஸ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். சசிகலா தனது புதிய கட்சிப் பெயரான ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ மூலம் தேர்தல் களத்தில் இறங்குகிறார்.

ஐந்த முனைப் போட்டிக்குத் தயாராகும் தமிழ்நாடு!

திமுக கூட்டணி, அதிமுக+பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தவெக ஆகியவற்றுடன் தற்போது ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் இணைந்துள்ளதால், தமிழ்நாட்டில் ஐந்த முனைப் போட்டி நிலவுகிறது. இது தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் மற்றும் சசிகலாவின் இந்தத் திடீர் முடிவு, தமிழ்நாடு அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *