சென்னை,ஏப்.19; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாநிலம் முழுவதும் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ரூ.8,000, ரூ.10,000 கூப்பன்கள் எனத் தேர்தல் வாக்குறுதி
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘இல்லத்தரசி திட்டம்’ குறித்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பரப்புரை செய்து வருகின்றனர். சில நிர்வாகிகள் ஒருபடி மேலே சென்று, ரூ.8 ஆயிரம் கூப்பனின் மாதிரியை தயாரித்து, வீடு வீடாக வழங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காசோலை போல துண்டுபிரசுரங்களை அச்சடித்து அதிமுவினர் பரப்புரை
இதே மாதிரியான குற்றச்சாட்டு அதிமுகவினர் மீதும் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுபோன்ற சூழலில், சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி, ரூ.2,000, ரூ.10,000 எனக் குறிப்பிட்டு, காசோலைகள் போன்ற துண்டு பிரசுரங்களை அச்சடித்து மக்களுக்கு விநியோகித்து அதிமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவிற்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் எனக்கூறி…
அதிமுகவிற்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்; இந்த செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஊழல் நடவடிக்கை போன்றதாகும் என்று மனுதாரர் சுந்தர வடிவேல் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனை அனுமதித்தால், தேர்தல் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்-ஆகவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி, காசோலை போன்ற மாதிரி துண்டுபிரசுரங்களை அச்சடித்து விநியோகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-மேலும் இந்த துண்டுப் பிரசுரங்களை தடுக்க நடவடிக்கை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
