Skip to content

விசிக, திருமாவளவன் குறித்த சர்ச்சை கருத்து; ஆ.ராசா மன்னிப்புக் கோர ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்!

சென்னை,மே.22;: தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விசிக மற்றும் அதன் தலைவர் திருமாவளவன் குறித்தான ஆ.ராசாவின் சமூக வலைத்தளப் பதிவிற்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஆ.ராசா தமிழ்நாட்டு மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதற்கு கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தவெக-வின் புதிய அமைச்சரவை: புதிய சமூகநீதி விடியல்

சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் புதிய அமைச்சரவையின் கட்டமைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.

“இன்றைய தினத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நாளாக நாங்கள் கருதுகிறோம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கனவு கண்ட சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கியுள்ளார்; இந்தத் தேர்தலில் பண பலமும், சாதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பழைய அரசியல் முறைகளும் மக்களால் முற்றிலுமாகத் தூக்கி எறியப்பட்டுள்ளன ; தவெக தலைவர் விஜய், ‘சி.ஜோசப் விஜய்’ எனத் தனது முழுப் பெயரை வெளிப்படையாகக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டதன் மூலம், மத அரசியலை அடித்து நொறுக்கியுள்ளார்; அவர் இன்று எல்லோருக்குமான ஒரு பொதுவான முதலமைச்சராக விளங்குகிறார்” என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ – வரலாற்றுச் சாதனை

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநில மாநாட்டில் அறிவித்தபடி, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கொள்கையைச் செயலாக்கியுள்ளது என்று ஆதவ் அர்ஜுனா பெருமிதம் கொண்டார்.

“பெரும்பான்மை இல்லாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் என்று சிலர் அச்சமூட்டினர்; அந்தச் இக்கட்டான தருணத்தில் முதலில் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவளித்தது; தொடர்ந்து இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின; ஆனால், முதலமைச்சர் விஜய் தான் கொடுத்த வாக்குறுதியின்படி, அந்தக் கட்சிகளையும் அமைச்சரவையில் இடம்பெறச் செய்து அதிகாரத்தைப் பகிர்ந்துள்ளார்; இதன் மூலம் 59 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது;

திருமாவளவனின் அதிகாரப் பகிர்வு குரல் இன்று நனவானது: ஆதவ் அர்ஜூனா

அதேபோல, 1999-லேயே திருமாவளவன் எழுப்பிய ‘அதிகாரப் பகிர்வு’ குரல் இன்று நனவாகியுள்ளது; 1948-ல் தொடங்கப்பட்ட ஐயூஎம்எல் கட்சிக்கு இதுவரை எந்த அரசும் அமைச்சரவையில் இடம் தரவில்லை, ஆனால் இன்று அவர்கள் அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளனர்; இந்த அமைச்சரவையில் 8 பட்டியலின சகோதரர்களுக்கு முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன; இது இந்தியாவே வியந்து பார்க்கும் ஒரு சமூகநீதி அமைச்சரவை” என்று அவர் விளக்கினார்.

“திமுகவுக்கு யாரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை”

கூட்டணி அரசியல் மற்றும் திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை இந்தக் கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் எதிர்கொண்டிருக்கலாம்; ஆனால், கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே; தேர்தலுக்குப் பின் யாருடன் கைகோர்ப்பது, ஆட்சியில் பங்கேற்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் முழு உரிமை அந்தந்தக் கட்சிகளுக்கு உண்டு; எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.

ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா கண்டனம்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் நேற்றைய எக்ஸ் தளப் பதிவு குறித்து ஆதவ் அர்ஜூனா மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்.

“விசிக மற்றும் அதன் தலைவர் திருமாவளவனைப் பற்றி ஆ.ராசா தனது எக்ல் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் மிகவும் மோசமானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை; ஒரு அரசியல் கட்சியையோ அல்லது தலைவரையோ பெண்ணின் உறவுடன் ஒப்பிட்டு தரம் தாழ்ந்து பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; பேரறிஞர் அண்ணா போதித்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ ஆகிய மூன்றையும் திமுக இன்று முழுமையாக மறந்துவிட்டது;

ஆ.ராசா ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்புக்கோர வலியுறுத்தல்

இத்தகைய தரமற்ற பதிவிற்காக ஆ.ராசா ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடமும், திருமாவளவனிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; மேலும், திமுக தரப்பில் இருந்து கனிமொழி அவர்கள் இதற்குப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற புதிய தத்துவம் தவெக அமைச்சரவை மூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் இந்த முடிவை திமுகவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையே ஆ.ராசாவின் விமர்சனங்கள் காட்டுவதாகப் தவெக தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. நாகரிகமான அரசியல் விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய தலைவர்கள், தரம் தாழ்ந்த தனிநபர் மற்றும் சாதியத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *