தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கும், ஆன்மிகப் பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ‘பட்டப்பெயர்’ முறை, காலப்போக்கில் திரையுலகிலும் மிக ஆழமாக வேரூன்றிவிட்டது. ஒரு நடிகரின் திறமை, குணம் அல்லது அவர் நடித்த கதாபாத்திரத்தின் தாக்கம் ஆகியவற்றைக் கொண்டு ரசிகர்கள் சூட்டும் இந்தப் பெயர்கள், அந்த நடிகரின் வாழ்நாள் அடையாளமாக மாறிவிடுகின்றன. திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களும் பலவித பெயர்களை சூட்டி அழைப்பது இங்கு வழக்கமாக இருந்து வருகிறது.
இது எப்போது தொடங்கியது, யாரிடம் தொடங்கியது என்பதைப் பார்க்கலாம்.
தொடக்க காலப் பட்டப்பெயர்கள்
தமிழ் சினிமாவின் ஆரம்பக் காலங்களில், ஒரு நடிகரின் நடிப்புத் திறன், குரல்வளம், உச்சரிக்கும் திறன், நடனம்,தோற்றம் ஆகியவற்றை பாராட்டியே பட்டங்கள் வழங்கப்பட்டன. உதாரணமாக, தியாகராஜ பாகவதர் அவரது இனிமையான குரலுக்காக ‘ஏழிசை மன்னர்’ என்றழைக்கப்பட்டார்.
ஈடு இணையற்ற நடிப்பை வழங்கியதற்காகவும், கர்ஜிக்கும் குரல்வளம் கொண்டவர் என்பதாலும் சிவாஜி கணேசன் “நடிகர்திலகம்”, “சிம்மக் குரலோன்”, “நடிப்புலகச் சக்கரவர்த்தி”, “வசன மன்னன்” எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார்.
பிரான்ஸ் அரசு வழங்கி கௌரவித்த “செவாலியே” என்ற பட்டமும் அவருடன் ஒட்டிக் கொண்டது. இவ்வளவு ஏன், சிவாஜி கணேசன் என்ற அவரது பெயரில் உள்ள “சிவாஜி”யே பெரியார் அவருக்கு வழங்கிய பட்டம்தானே.!
எம்ஜிஆருக்கு எண்ணிலடங்கா பட்டங்கள்…!!
இதேபோன்று எம்ஜிஆருக்கும் பல பட்டப்பெயர்கள் வழங்கி அழகு பார்த்தனர் அவரது ரசிகர்களும், தலைவர்களும். இதனை தொடங்கி வைத்தவர், பேரறிஞர் அண்ணாதுரை. அவர் எம்ஜிஆருக்கு கொடுத்த பட்டம் இதயக்கனி. பின்னர் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை உடந்தை உலகப்பன் வழங்கினார். கொடுத்துச் சிவந்த கரம் என்ற பட்டத்தை கும்பகோணம் ரசிகர்கள் வழங்கினர். முருக பக்தரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான திருமுருக கிருபானந்த வாரியார் எம்ஜிஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார். இவைதவிர, மக்கள் திலகம், இதயதெய்வம், வசூல் சக்கரவர்த்தி, புரட்சித்தலைவர், புரட்சிநடிகர் என கணக்கிடலங்கா பட்டங்கள் எம்ஜிஆருக்கு உண்டு.
‘நடிகவேள் ‘, ‘ லட்சிய நடிகர்’ என்றெல்லாம் ஏகப்பட்ட பட்டங்கள்…!
நடிப்பில் பன்முகத்தன்மையை காட்டியதோடு, நிமிடத்திற்கு நிமிடம் முகபாவனையை மாற்றும் வல்லமை படைத்த எம்ஆர் ராதாவுக்கு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை சூட்டினார், திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி.
எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ‘லட்சிய நடிகர்’, ஜெமினி கணேசனுக்கு “காதல் மன்னன்”, ஜெய்சங்கருக்கு” மக்கள் கலைஞர்”, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு “கலைவாணர்”, முத்துராமனுக்கு “நவரசத்திலகம்” என மனதுக்கு பிடித்தமான நடிகர்களுக்கு பல பெயர்களை சூட்டி அழகு பார்த்தனர் ரசிகர்கள்.
பிராண்டாக மாறிய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம்..! உலக நாயகன் பட்டமும் அப்படித்தான்..!
இதன் தொடர்ச்சியாக 70-களில் திரையுலகில் அடியெடுத்து வைத்த ரஜினிகாந்துக்கு சூட்டப்பட்ட “சூப்பர் ஸ்டார்” என்ற பெயர் இன்று உலகளாவிய ஒரு பிராண்டாக மாறிவிட்டது.
நடிகர் கமல்ஹாசன் அவரது கலைத்தாகத்திற்காகவும், உலகத் தரத்திலான முயற்சிகளுக்காகவும், நடிப்பாற்றலுக்காகவும் ‘உலகநாயகன்’ என்றழைக்கப்படுகிறார். அந்த வரிசையில் சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்றும், விஜயகாந்த் புரட்சிக்கலைஞர்,கேப்டன் என்றும் அழைக்கப்பட்டனர். கார்த்திக்கை ‘நவரச நாயகன்’ என்றும், சத்யராஜை ‘புரட்சித்தமிழன்’ என்றும், பிரபுவை ‘இளையதிலகம்’ எனவும் அழைத்து மகிழ்ந்தனர் ரசிகர்கள்.
பாடல், இசை, வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என பலவற்றை கையாண்ட டி.ராஜேந்தர் ‘அஷ்டாவதானி’ என்றும் அவரது மகன் சிலம்பரசன் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.
நடிகர் விக்ரம் சீயான் என்றழைக்கப்படுகிறார். அஜித்குமாரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். ஆனால், அதனை அஜித் விரும்பவில்லை.
இசையமைப்பாளர்கள், நகைச்சுவை நடிகர்களுக்கும் பட்டப்பெயர்
இசை அமைப்பாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், ஸ்டன்ட் நடிகர்கள், நடிகைகள் என திரையுலகில் பலருக்கும் பட்டப்பெயர்கள் உண்டு.
இங்குதான் ரசிகர் மன்றங்களுக்கு இடையிலான போட்டிகளும், தங்களின் நாயகனை மற்றவரை விட உயர்வாகக் காட்டும் போக்கும் அதிகரித்தது.
பெயருக்குப் பின்னால் உள்ள அரசியல் இன்றைய தலைமுறை நடிகர்களுக்குப் பட்டப்பெயர்கள் என்பது சினிமா வியாபாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அப்படித்தான் தொடக்கத்தில் “இளையதளபதி” என்றழைக்கப்பட்ட நடிகர் விஜய் பின்னர் ‘தளபதி’ ஆனார்.
தற்போது ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை, புரட்சித்தளபதி என்றழைத்துள்ளார் மூத்த தலைவர் செங்கோட்டையன்.
இந்தப் பெயர்கள் எப்படி உருவாகின்றன?
நடிகர்களுக்குப் பட்டப்பெயர்கள் சூட்டப்படுவதற்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன. தங்களின் நாயகனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்ட ரசிகர்கள் பலவித பெயர்களை சூட்டி அழைக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் நடிகரின் பெயரைப் போடும்போது வரும் கைத்தட்டல்களுக்காகச் சேர்க்கப்படும் அடைமொழிகளாகவும் பட்டப்பெயர்கள் மாறிவிட்டன.
சமூகத் தாக்கம்: நன்மையும் தீமையும்
நன்மைகள்: ஒரு நடிகருக்கு தனித்துவமான அங்கீகாரம் கிடைக்கிறது. ரசிகர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தப் பெயர்கள் விளங்குகின்றன.
தீமைகள்: பல நேரங்களில் இந்தப் பட்டப்பெயர்கள் ரசிகர்களுக்கு இடையே தேவையற்ற மோதல்களை உருவாக்குகின்றன. “யார் பெரியவர்?” என்ற சண்டையில் சமூக வலைதளங்களில் ஆரோக்கியமற்ற விவாதங்கள் எழுகின்றன.
தமிழ் சினிமாவில் பட்டப்பெயர்கள் என்பது வெறும் பெயரல்ல; அது ஒரு நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான பிணைப்பாக மாற்றப்பட்டுள்ளது. காலங்கள் மாறினாலும், நடிகர்கள் மாறினாலும் தமிழ் மண்ணில் இந்த ‘பட்டப்பெயர் கலாச்சாரம்’ சினிமா இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
