நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு மேலராகப் பணியாற்றிவந்த பி.டி.செல்வகுமார், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.12.2025) திமுகவில் இணைந்தார். திரைப்படத்துறையில் நடிகர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராகப் பணிபுரிந்தவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்துவரும் செல்வகுமார், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
விஜய் மீது பி.டி.செல்வகுமார் குற்றச்சாட்டு
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விஜய் மக்கள் இயக்கத்திற்கு தூணாக செயல்பட்ட தன்னைப் போன்றவர்களை, தவெகவிற்கு புதிதாக வந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். தவெகவில் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளதாகவும் செல்வகுமார் தெரிவித்தார். தான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை துகில் இணைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
நிலவு ஒருநாள் அமாவாசையாகும்: பி.டி.செல்வகுமார்
நிலவு ஒருநாள் அமாவாசையாகும், நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களா? என்று செல்வகுமார் வினவினார். மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா எனத் தெரியவில்லை, ஆனால் தனது உயிரிருக்கும் வரை மக்களுக்கு சேவை ஆற்றுவேன் என்றும் செல்வகுமார் தெரிவித்தார். கலப்பை இயக்கத்தில் இருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்தனர்.
