Skip to content

விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்ட மறுப்பு!

டெல்லி,மார்ச்.28; தமி்ழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்குதரத் தயார் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் முன்பு அறிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று அந்தக் கட்சி ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டது.

கூட்டணிக் கதவை திறந்து வைத்திருந்தும் யாரும் வராத நிலையில், வரும் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் என்று விஜய் தெரிவித்தார். தவெக கூட்டணி அமைத்து போட்டியிடப் போகின்றது என யாராவது சொன்னால் நம்ப வேண்டாம் என்றுகூட அவர் கூறினார்.

விஜய் கூறியது ஒன்று, ஆதவ் அர்ஜூனா கூறியது வேறு..!!

ஆனால், தவெகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தேர்தலில் தவெகவிற்கு 90 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் தர ஒரு கட்சி முன் வந்ததாக பல இடங்களில் பேசினார். ஆனால், எந்தக் கட்சி என்று அவர் குறிப்பிடவில்லை.

அதேவேளையில், தவெக-வுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தொடர்ந்து பேசி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமித்ஷா

இதுபோன்ற சூழலில், டெல்லியில் நேற்று (மார்ச் 28, 2026) நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித்ஷா, தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி வைக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை; இந்தக் கூட்டணிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்காதது ஏன்?

விஜய்யுடன் கூட்டணி அமைக்காததற்கான காரணத்தையும் அமித்ஷா சூசகமாக விளக்கினார். அவர் கூட்டணிக்கு வந்தால் பாஜகவின் வாக்கு வங்கியில் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருவதாக நிலவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதிமுக உடனான உறவு மற்றும் தேர்தல் வியூகம்

தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியே தங்களுக்குப் பலம் சேர்ப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்த சிறிய மாநிலக் கட்சிகளையும் இணைத்துச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் தற்போது திமுகவிற்கு எதிரான அலை வீசுகிறது; எனவே, வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜூனா கூறியது உண்மையா? அமித் ஷா கூறுவது நிஜமா?

அமித்ஷாவின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒருபுறம் இருக்க, பாஜக தனது பழைய கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திப்பதையே விரும்புகிறது என்பதனை இது காட்டுகிறது. 2026 தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *