சென்னை,மே.07; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மைக்கு இல்லாத நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவு; வேறு கட்சிகளின் ஆதரவு கிட்டவில்லை
இதனையடுத்து தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், வேறு எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் வழங்கினார். ஆனால்,பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைக்கவில்லை.
ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார் தவெக தலைவர் விஜய்
இதுபோன்ற பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்துப் பேசினார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று ஆளுநரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் -விஜய் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த விஜய், தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
பெரும்பான்மையை தவெக நிரூபிக்கவில்லை: ஆளுநர் மாளிகை
பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக நிரூபிக்கவில்லை; பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சியமைக்க உரிமை கோர முடியும்; சட்டப்பேரவை யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சியமைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது; தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும்; ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப் பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது; பெரும்பான்மை இருக்கிறது என விஜய் நிரூபித்தால் அடுத்த நிமிடம் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்; தமிழ்நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதில் ஆளுநர் உறுதியாக உள்ளார் என்று, ஆளுநர் மாளிகையின் விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதரவை நிரூபித்தால் விஜய்க்கு பதவியேற்பு!
இவ்வாறு பல்வேறு விளக்கங்களை கூறி ஆளுநர் தற்போதைய சூழலில் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மை உள்ளது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்ட நிபுணர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை!
இதனிடையே, ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், விஜய் பதவியேற்பு நிகழ்வு குறித்து மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தவெக எம்எல்ஏ-க்களுடன் பனையூரில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
