Skip to content

விஜய்யை விமர்சிக்காதது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையான விளக்கம்!

சென்னை,ஏப்.20; தமிழ்நாடு அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு இடையேயான அரசியல் மோதல்தான்.கட்சி தொடங்கியது முதலே விஜய் திமுக-வை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்குப் பதில் அளிக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. இதற்கு தற்போது ஸ்டாலின் விரிவான விளக்கமளித்துள்ளார்.

திமுக-வை விமர்சிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது!

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “புதிதாக அரசியல் கட்சி தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும், திமுக-வை விமர்சனம் செய்தால்தான் வளர முடியும் என்று நினைக்கிறார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான். எடப்பாடி பழனிசாமியை கூட நான் கடுமையாகப் பேசுவதில்லை; அவர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலைத் தான் நான் அளிக்கிறேன்” என்று கூறினார்.

விஜய்யின் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை

விஜய் திமுக-வை குறிவைத்துத் தாக்குவது குறித்துக் கேட்டபோது, “திமுக இதுபற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், பலரும் திமுக ஆட்சியில் கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் கலைஞர் கருணாநிதியின் திட்டங்களால் பயனடைந்ததை நன்றியுடன் கூறுகின்றனர். திமுக ஒரு ஆக்க சக்தி. தமிழகத்திற்குப் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் வந்துள்ளதே எங்களது ஆட்சிக்குச் சான்று,” என முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் நாகரிகமா அல்லது தேர்தல் வியூகமா?

விஜய்யை விமர்சிக்காதது முதலமைச்சரின் அரசியல் நாகரிகத்தைக் காட்டுகிறதா அல்லது வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகமா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். “யார் வந்தாலும் திமுக-வை எதிர்த்தால் தான் முன்னேற முடியும் என்ற எண்ணம் தவறானது” என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

விமர்சனங்களை அதிகம் பார்த்த கட்சி திமுக

திமுக-வின் நீண்ட கால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பல விமர்சனங்களைக் கடந்து வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதை விடத் தனது அரசின் சாதனைகளைப் பேசுவதே சிறந்தது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *