Skip to content

விஜய்-காங்கிரஸ் நிர்வாகி சந்திப்பு!; அணி மாறும் காங்கிரஸ்?

ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக களம் காண உள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய விஜய், “எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தரப்படும்” என அறிவித்திருந்தார். அதாவது அமைச்சரவையிலும் பங்கு தரப்படும் என்பதைத்தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசியலுக்கு முற்றிலும் புதிதாக பார்க்கப்பட்டது. மாநிலத்தை இதுவரை ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததே கிடையாது. தற்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது. இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து ராகுல்காந்தி அண்மையில் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதுபோன்ற சூழலில், ராகுலுக்கு நெருக்கமானவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார். விஜய்யை சந்தித்ததை ஒப்புக்கொண்ட சக்கரவர்த்தி, அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், வேறு எதனையும் தற்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அப்படியானால், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அணி மாறுகிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *