புதுச்சேரியில் இன்று நடைபெறும் தவெகவின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தவெக சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை அம்மாநில போலீஸ் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து டிசம்பர் 9ஆம் தேதியன்று, அதாவது இன்றைய தினம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்று, பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது. அதன்படி,புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தவெகவின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதுச்சேரியைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்கள் உள்பட, தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது – கருவுற்ற பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியோர், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறுகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும் – காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் – போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும் – வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல்துறை அனுமதித்துள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மதில்சுவர்கள், மரங்கள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக்கூடாது – மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது – சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலோ அவற்றின் அருகில் செல்லக்கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை என்.ஆனந்த் தனது அறிக்கையில் வழங்கியுள்ளார்.
