தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் அதற்கு ஒரு காரணமாகும். அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுக அதிகாரத்தை தக்க வைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக அதிகாரத்தை வென்றெடுக்கவும் தங்களது கூட்டணிகளை பலப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. கரூர் நிகழ்வுக்குப் பின்னர் விஜய்யுடன் ராகுல் பேசிய தொலைபேசி உரையாடல், அதனை உறுதிசெய்தது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்துப்பேச காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது. இதன்வாயிலாக தவெகவுடன் கூட்டணி என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ். இதுபோன்ற சூழலில், காங்கிரஸ் தவெகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், காங்கிரஸ் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று (05.12.2925) சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்றும் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார். இதனிடையே, பிரவீன் சக்கரவர்த்தி-விஜய் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படும் விசயங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் 78 தொகுதிகளை தவெகவிடம் பிரவீன் சக்கரவர்த்தி கேட்டிருப்பதாகப் பேசப்படுகிறது. தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்ததால், துணை முதலமைச்சர் பதவி குறித்து சக்கரவர்த்தி பேசியிருக்கக்கூடும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
