சென்னை,மார்ச்.05; சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புகாரில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் நடந்தது என்ன?
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் 6-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோர் பயணம் செய்துள்ளனர். தியாகு ஒரு வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
பயணத்தின் போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயது இளம்பெண்ணிடம் (விமானப் பணிப்பெண்) இருவரும் அத்துமீறியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணை ஒருமையில் அழைத்தும், அவரது ஊர் பெயரைக் கேட்டு பரிகாசம் செய்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையில் புகார் மற்றும் விசாரணை
விமானப் பணிப்பெண் இச்சம்பவம் குறித்து சென்னை மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் பிப்ரவரி 26-ம் தேதி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.
விமான நிலையத்தில் அதிரடியாக கைது
இதுபோன்ற சூழலில், பிரபாகரனும், தியாகுவும் டெல்லிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பினர். அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடனேயே, காத்திருந்த மீனம்பாக்கம் மகளிர் போலீசார் 2 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தேவைப்பட்டால் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து இடைநீக்கம்
விமான பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியது. அவரது செயலை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. இதுபோன்ற சூழலில், பிரபாகரனை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
