சென்னை, மார்ச்.26; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முதன்முறையாக இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீ்ட்டும் ஒதுக்கப்பட்டது.
முந்தைய (2021) தேர்தலில் 0.43 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்ற தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதா என்று கூட்டணி கட்சியினர் திமுக மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து, எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளும் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பிரேமலதா பேச்சு
இதுபோன்ற சூழலில், நேற்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகளுக்கான பட்டியலை அவர் டி.ஆர். பாலுவிடம் வழங்கினார்.
பட்டியலில் உள்ள விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்…
அதில் விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகள் கேட்கப்பட்டிருந்தன.
ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். 2011 தேர்தலில் விஜயகாந்த் இந்தத் தொகுதியில் வென்றுதான் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்தத் தொகுதியை பிரேமலதா கேட்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
இதேபோல் விருகம்பாக்கம் கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவின் பார்த்தசாரதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் அவருக்காக இந்தத் தொகுதி கேட்கப்பட்டது.
விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுப்பு
இருப்பினும், திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு, இந்த இரண்டு தொகுதிகளையும் தேமுதிகவுக்கு ஒதுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. திமுகவின் இந்தத் முடிவால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு விருப்பமான தொகுதிகள் கிடைக்காத அதிருப்தியில், பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயத்தை விட்டு கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினார். இன்று (மார்ச் 27, 2026) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ள நிலையில், தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
தேர்தல் நெருங்கும் வேளையில், தொகுதிகளை அடையாளம் காண்பது என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விருகம்பாக்கம் மற்றும் ரிஷிவந்தியம் விவகாரத்தில் திமுக இறங்கி வருமா அல்லது தேமுதிக தனது பிடியைத் தளர்த்திக் கொள்ளுமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரும்.
