Skip to content

விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி உறுதி: மாணிக்கம் தாகூர் எம்பி நெகிழ்ச்சிப் பதிவு!

மதுரை,ஏப்.09; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியும், அவரது மகன் விஜயபிரபாகரன் களம் கண்டுள்ள விருதுநகர் தொகுதியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

முன்னாள் எதிரிகள்.. இன்றைய கூட்டாளிகள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூரும் (காங்கிரஸ்), விஜய பிரபாகரனும் (தேமுதிக) ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிட்டனர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (சுமார் 4,000 வாக்குகள்) மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தற்போது அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனால், விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.

திருநகர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியான சந்திப்பு

விருதுநகர் தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் விஜய பிரபாகரன், மதுரை திருநகரில் உள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதோடு, தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இந்த மண்ணின் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர், ‘கேப்டன்’ விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று என்னைச் சந்தித்தார். அவர் வெற்றி பெற இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து செயல்படும்”

ராகுல் காந்தியின் ஆசியுடன் மாபெரும் வெற்றி

விஜய பிரபாகரனின் வெற்றி குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆசியோடும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடும் விஜய பிரபாகரன் மாபெரும் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். விஜயகாந்தின் அரசியல் வாரிசாகக் களமிறங்கியுள்ள விஜய பிரபாகரனுக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த ஆதரவு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் களம் யாருக்கு?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதற்கு விருதுநகர் தொகுதியே சான்று. ஒரு காலத்தில் நேர் எதிரே களம் கண்ட வேட்பாளர்கள் இன்று கைகோர்த்து நிற்பது திமுக கூட்டணியின் பலத்தை அதிகரித்துள்ளது. விஜய பிரபாகரனின் இந்தச் சந்திப்பு, அவரது வெற்றிக்கான பாதையை மேலும் எளிதாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *