அடிப்படை விலை கத்தாருடன் ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்வு; இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.7.8 லட்சம் வரை அதிகரிப்பால் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி.
2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவைக் காணத் திட்டமிடும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. காரணம், உலகக் கோப்பையின் டிக்கெட் விலை பொதுவான ரசிகர்களால் சாதாரணமாக வாங்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் கால்பந்து சம்மேளனம் (DFB) சமீபத்தில் வெளியிட்ட ஒரு பட்டியலில், பல்வேறு குழு நிலை ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை $180 முதல் $700 வரை (தோராயமாக ₹16,000 முதல் ₹64,000 வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கத்தாரை விட அடிப்படை கட்டணம் அதிகம்!
2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையின் ஆரம்ப டிக்கெட் விலை $70 முதல் $1,600 வரை இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அடிப்படை விலையே அதைவிட மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களைக் கோபமடையச் செய்தது இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை. ஜூலை 19 அன்று மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் டைட்டில் கிளாஷ் போட்டிக்கான குறைந்தபட்ச கட்டணம் $4,185 ஆகும். அதிகபட்ச விலையோ, பிரமிக்க வைக்கும் வகையில் $8,680 (தோராயமாக ₹3.9 லட்சம் முதல் ₹7.86 லட்சம் வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்: ரசிகர் அமைப்பு கண்டனம்
இந்த விலைப் பட்டியலைக் கண்ட ஃபுட்பால் சப்போர்ட்டர்ஸ் யூரோப் (FSE) என்ற உலகளாவிய ரசிகர் அமைப்பு, FIFA-வின் இந்த நடவடிக்கையை “பாரம்பரியத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்று கண்டித்துள்ளது. தேசிய சங்கங்கள் மூலம் நடக்கும் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், டிக்கெட் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உலக கால்பந்து நிர்வாக அமைப்பான FIFA-வைக் கோரியுள்ளனர்.
FSE வெளியிட்ட அறிக்கையில், “இது உலகக் கோப்பையின் பாரம்பரியத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதன் பிரம்மாண்டத்திற்கு ஆதரவாளர்களின் பங்களிப்பை இது முற்றிலும் புறக்கணிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகளின்படி, ஒவ்வொரு போட்டிக்கும் 8% டிக்கெட்டுகளை, அந்தந்த தேசிய கால்பந்து சங்கங்கள் தங்கள் மிகவும் விசுவாசமான ரசிகர்களுக்கு விற்க FIFA அனுமதிக்கிறது. இங்கிலாந்து கால்பந்து சங்கம் (ESTC) பகிர்ந்த விலைப்பட்டியல் படி, ஒரு ரசிகர் தங்கள் நாட்டின் முதல் ஆட்டம் முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து ஆட்டங்களுக்கும் டிக்கெட் வாங்கினால், அதற்கான மொத்த செலவு $7,000 (தோராயமாக ₹6,33,000) வரை ஆகும்.
டைனமிக் விலை நிர்ணயம் என விளக்கம்
FIFA அமைப்பு செப்டம்பரில் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பத்தில் டிக்கெட்டுகளின் விலை குழுநிலை ஆட்டங்களுக்கு $60 இல் தொடங்கி இறுதிப் போட்டிக்கு $6,730 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், FIFA ‘டைனமிக் விலை நிர்ணயம்’ (Dynamic Pricing) முறையைப் பின்பற்றுவதால், இந்த விலைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை.
தற்போது, ரசிகர்கள் குறிப்பிட்ட ஆட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் ‘Random Selection Draw’ எனப்படும் டிக்கெட் விற்பனையின் மூன்றாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாளரம் ஜனவரி 13 அன்று நிறைவடைகிறது.
