Skip to content

2027 உலகக்கோப்பை: “நான் இன்னும் என்னை நிரூபிக்க வேண்டுமா?” – விராட் கோலி ஆவேசம்!

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் விராட் கோலி, தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பாட்காஸ்டில் (Podcast) பேசிய அவர், அணியில் தனது மதிப்பு மற்றும் தகுதியைத் தீர்மானிப்பவர்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

“தகுதியை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நான் இல்லை”

விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 2027 உலகக்கோப்பையில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கோலி, “எனது நிலைப்பாடு மிகவும் தெளிவானது; என்னால் அணிக்கு ஒரு மதிப்பைக் (Value) கூட்ட முடியும் என்றும், அணி நிர்வாகமும் அதை உணர்ந்தால் மட்டுமே நான் அங்கு இருப்பேன்; மாறாக, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று யாராவது கருதினால், அந்த இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்

தனது பயிற்சி முறைகள் குறித்துப் பேசிய அவர், “நான் மற்றவர்களை விடக் கடினமாக உழைக்கிறேன்; மைதானத்தில் 40 ஓவர்கள் ஓடச் சொன்னாலும் நான் முகம் சுளிக்காமல் செய்வேன்; ஏனெனில் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன்; ஒரு போட்டியில் விளையாடும்போது அதுவே எனது கடைசிப் போட்டி என்பது போன்ற அர்ப்பணிப்புடன் தான் விளையாடுகிறேன்; இவ்வளவு செய்த பிறகும் எனது தகுதியைச் சந்தேகிப்பது தேவையற்றது” என்று குறிப்பிட்டார்.

அலுவலகச் சூழலுடன் ஒப்பீடு

தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சாதாரண வேலைச் சூழலுடன் ஒப்பிட்ட கோலி, “ஒரு அலுவலகத்தில் உங்களை நம்புவதாகக் கூறிவிட்டு, அடுத்த வாரமே உங்கள் முறைகளைக் கேள்வி கேட்டால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும். நான் திறமையானவன் இல்லை என்றால் அதை முதல் நாளே சொல்லிவிடுங்கள். அதை விடுத்து முடிவுகளை வைத்து ஒவ்வொரு வாரமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடாது,” என்று சாடினார்.

விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு இன்னும் காலம் இருந்தாலும், அவர் விளையாடுவது என்பது கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மற்றும் அணி நிர்வாகம் அவருக்கு அளிக்கும் மரியாதையைப் பொறுத்தே அமையும் என்பது அவரது பேச்சிலிருந்து தெளிவாகிறது. கிரிக்கெட் மீதான காதலுக்காக மட்டுமே தான் விளையாடுவதாகவும், எதற்கும் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் கோலி தனது பாணியில் ‘பஞ்ச்’ கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *