Skip to content

234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு; அதிகாலை முதலே ஆர்வத்துடன் வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்!

சென்னை,ஏப்.23; தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை தொடங்கியது. 234 தொகுதிகளிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வருகை தருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்துவிட்டால், டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நின்று வாக்கு செலுத்தலாம். மாலை 6 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க முடியாது.

பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் வாக்குப்பதிவு

தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிலே முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக அஜித்குமார் வாக்களித்துள்ளார். பின்னர் வெளியே வந்த அவர் கை விரலில் இடப்பட்ட மையை காண்பித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

ஜனநாயகக் கடமையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ப.சிதம்பரம்

இதேபோல் சேலம், சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜனநாயகக் கடமையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இம்முறை இளம் வாக்காளர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

“இளைஞர்கள் கற்பனையான யோசனைக்கு வாக்களிக்க முடியாது”

ஆனால், அவர்கள் ஒரு நிலையான அரசுக்கும், வளர்ச்சிக்கும், நலத்திட்டங்களுக்கும் வாக்களிக்க வேண்டும்; அவர்களால் ஒரு கற்பனையான யோசனைக்கு வாக்களிக்க முடியாது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் வழங்கப்பட்ட நியாயமான அரசு, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் மதச்சார்பின்மைக்கும் முன்னேற்றத்திற்கும் வாக்களிக்க வேண்டும்- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றிபெற்று, திமுக ஆட்சியமைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

நடிகர் விஜய், தமிழிசை, சீமான், சுந்தர் சி வாக்கு செலுத்தினர்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நீலாங்கரையிலும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது மகளுடன் சென்று சென்னை சாலிகிராமத்திலும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

இதேபோன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை நீலாங்கரையிலும், மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர் சி, தனது மனைவி குஷ்பு மற்றும் மகளுடன் சென்னை மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு 85 விழுக்காட்டை எட்டும் என நம்பிக்கை

வாக்காளர் பட்டியல் தொடர்பான S.I.R பணிகள் நிறைவடைந்து சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழ்நாட்டின் வாக்கு விழுக்காடு 85%-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *