Skip to content

3 நாடுகள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார், மோடி; ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு விஜயம்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வரலாற்று மற்றும் நாகரிகப் பிணைப்பைக் கொண்டுள்ள மூன்று நாடுகளான ஜோர்டான், எத்தியோப்பியா, மற்றும் ஓமன் ஆகியவற்றிற்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த விஜயம், இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், புதிய பரிமாணங்களுக்கு இட்டுச் செல்லவும் வழிவகை செய்கிறது.

ஜோர்டானில் 75 ஆண்டுகால உறவைக் கொண்டாடுதல்

பிரதமர் மோடியின் இந்த முத்தரப்புப் பயணத்தின் முதல் கட்டமாக, மாட்சிமை தங்கிய இரண்டாம் அப்துல்லா இப்ன் அல் ஹுசைன் மன்னரின் அழைப்பின் பேரில் ஜோர்டானுக்குச் செல்கிறார். இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையேயான உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும்.

ஜோர்டானில், பிரதமர் மோடி அவர்கள் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்ன் அல் ஹுசைன், பிரதமர் ஜஃபர் ஹசன் ஆகியோருடன் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லாவையும் சந்தித்து உரையாடவுள்ளார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு நலன்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் உரை

பிரதமர் மோடியின் பயணத்தில் எத்தியோப்பியாவுக்கான விஜயம் ஒரு முதல் நிகழ்வாகும். எத்தியோப்பியாவில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.அங்கு, எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், எத்தியோப்பியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து, அவர்களின் பங்களிப்பையும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிவரும் பணியையும் பாராட்டவுள்ளார்.

ஓமனுடன் 70 ஆண்டுகாலத் தூதரக உறவுகளை வலுப்படுத்துதல்

முத்தரப்புப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, பிரதமர் மோடி ஓமன் சுல்தானகத்திற்குச் செல்கிறார். இது இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையேயான உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.மஸ்கட்டில், பிரதமர் மோடி, ஓமன் சுல்தானுடன் வலிமையான வணிக-பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *