Skip to content

7ஆவது நாளாக 300 விமானங்கள் ரத்து; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

இண்டிகோ விமான நிறுவன விவகாரம் 7ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று 300-க்கும் அதிகமான விமானங்கள் த்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தத் தொடர் விமான ரத்துகளுக்கு முக்கிய காரணம் விமானிகள் பற்றாக்குறை மற்றும் புதிய விமானப் பணி நேர வரம்பு (FDTL) விதிகளை முழுமையாக அமல்படுத்தியதே ஆகும். விமானிகளின் சோர்வைக் குறைக்கும் நோக்கில், இந்த விதிகள் வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரமாக உயர்த்தியுள்ளன, அத்துடன் ஒரு விமானி ஒரு வாரத்தில் மேற்கொள்ளும் இரவு நேர விமானப் பயணங்கள் (Night Landings) இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளுக்கு ஏற்றவாறு போதுமான விமானிகளை பணியில் அமர்த்துவதில் இண்டிகோ நிர்வாகம் தவறாகக் கணித்துவிட்டதை (misjudgement) ஒப்புக்கொண்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோ நிறுவனத்தின் CEO மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமானச் சேவைகளைச் சீராக்க, இண்டிகோவின் A320 ரக விமானங்களுக்கு பிப்ரவரி 10, 2026 வரை FDTL விதிகளின் சில கட்டுப்பாடுகளிலிருந்து தற்காலிக விலக்கு (Temporary Exemption) அளிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் DGCA-விடம் அளித்த உறுதிமொழியின்படி நெட்வொர்க் ஸ்திரத்தன்மை டிசம்பர் 10, 2025-க்குள் செயல்பாடுகள் ஓரளவுக்குச் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை ஓரிரு தினங்களில் சீராகிவிடும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (08.12.2025) மேலும் 300 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துவிட்டது. அதன்படி டெல்லி்யிலிருந்து 134 விமானங்களும், பெங்களூருவிலிருந்து 127 விமானங்களும், சென்னையிலிருந்து 71 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக இண்டிகோ உறுதியளித்துள்ள நிலையில், நாள்தோறும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவது பயணிகளுக்கு மிகுந்த இன்னலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,500 சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *