Skip to content

93 ஆண்டுகளில் இல்லாத சாதனை; ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!

முல்லான்பூர்,ஜூன்.08; பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் இதுவே மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகும்.

93 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றுப் பக்கங்களில் இந்த வெற்றி ஒரு புதிய சாதனையாக எழுதப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, மூன்றே நாட்களுக்குள் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்திய அணியின் பிரமாண்ட ரன் குவிப்பு

பூவா தலையா (Toss) வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார சதங்களும், சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பும் இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றன. வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான அரைசதமும் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியது.

அறிமுகப் போட்டியில் மிரட்டிய மானவ் சுதர்

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆப்கானிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் அவர், 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இவருடைய சுழலில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 152 ரன்களுக்கு சுருண்டது.

ஃபாலோ-ஆன் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழல் வேட்டை

412 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ‘ஃபாலோ-ஆன்’ வழங்கினார். இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் தடுமாறியது.

குறிப்பு: ஆப்கானிஸ்தானின் கடைசி பேட்ஸ்மேன் ஷரஃபுதீன் அஷ்ரப் காயம் காரணமாக களம் இறங்காததால், 9 விக்கெட்டுகள் இழந்த நிலையிலேயே ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் மற்றும் மானவ் சுதர் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தானை 112 ரன்களுக்குள் சுருட்டினர்.

7 விக்கெட்டுகளை அள்ளிய மானவ் சுதர் ஆட்டநாயகன்

இறுதியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அறிமுகப் போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ் சுதர் ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய அணியின் இளம் வீரர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. குறிப்பாக மானவ் சுதரின் வருகை இந்திய சுழற்பந்து வீச்சின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்துள்ளது.

டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் வரும் 13ஆம் தேதியன்று தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவிய போதிலும் ஒருநாள் போட்டிகளில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *