Skip to content

அமெரிக்க-சீன அதிபர்கள் சந்திப்பு; போட்டியாளர்களாக அல்ல, கூட்டாளிகளாக இருக்க ஜி ஜின்பிங் அழைப்பு!

பெய்ஜிங்,மே.14; சீன அதிபர் ஜி ஜின்பங்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று (மே 14, 2026) நடைபெற்றது. உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பிரமாண்டமான ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ (Great Hall of the People) வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன ராணுவ இசைக்குழுவினர் இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் இசைத்தனர்.

சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், “சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக இருக்கக் கூடாது; இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்; ஒத்துழைப்பு இரு தரப்புக்கும் பலன் தரும், மோதல் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை

அதிபர் டிரம்ப் தனது உரையில், “உங்களுடன் இருப்பது எனக்குப் பெருமை; உங்களுடைய நண்பராக இருப்பதையும் நான் கௌரவமாகக் கருதுகிறேன்; சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதையும் விட சிறப்பாக அமையப் போகிறது” என்று பேசினார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் போர் நெருக்கடி, வர்த்தகம் மற்றும் தைவான் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தைவான் விவகாரத்தில் எச்சரிக்கை

இருப்பினும், தைவான் விவகாரத்தில் ஜி ஜின்பிங் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “தைவான் விவகாரம் சீனா-அமெரிக்க உறவில் மிகவும் முக்கியமான விஷயம்; இதைச் சரியாகக் கையாளாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது, இது ஒட்டுமொத்த உறவையும் ஆபத்தில் தள்ளும்” என்று அவர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஈரான் போர் மற்றும் வர்த்தக ஒப்பந்தம்

ஈரான் போர் நெருக்கடியைத் தீர்ப்பதில் சீனா அதிகப் பங்காற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு எட்டப்பட்ட வரிச் சலுகை ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

டிரம்பின் சீனப் பயணம் உலக அரசியலில் ஒரு திருப்புமுனை!

அதிபர் டிரம்பின் இந்தப் பயணம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தைவான் போன்ற சிக்கலான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வர்த்தகம் மற்றும் உலக அமைதி ஆகிய தளங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. டிரம்ப் தனது பயணத்தின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சொர்க்கக் கோவில்’ (Temple of Heaven) இடத்திற்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *