டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று காலை 95.94 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, தற்போதைய வர்த்தக நேரத்தில் 96.11 ஆக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சரிவுக்கு மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நாணய சந்தை மாற்றங்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள், மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாட்டு பொருட்களின் விலை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம், ஏற்றுமதி துறைக்கு ரூபாய் சரிவு சில அளவில் சாதகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், நீண்டகால சரிவு இந்திய பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், சர்வதேச சந்தை நிலவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
