மும்பை,ஜூன்.22; மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை (MPs) தங்கள் பக்கம் இழுப்பதற்காக ஆளும் கூட்டணி நடத்திய ‘ஆபரேஷன் டைகர்’ (Operation Tiger) முழு வெற்றி பெற்றுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஆபரேஷன் டைகர் என்றால் என்ன?
மகாராஷ்டிராவில் சிவசேனா (UBT) கட்சிக்கு மொத்தம் 9 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், மூன்றில் இரண்டு பங்கு அதாவது குறைந்தபட்சம் 6 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இந்த 6 எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைக்கும் ரகசிய திட்டமே ‘ஆபரேஷன் டைகர்’ என்று அரசியல் வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் உத்தவ் தாக்கரே நடத்திய நாடாளுமன்றக் குழு கூட்டத்தை 6 எம்பிக்கள் புறக்கணித்த போதே இந்த ஊகங்கள் வலுத்தன.
பட்னாவிஸ் மற்றும் ஷிண்டேவின் அதிரடி பேட்டி
மும்பையில் நேற்று (ஜூன் 21, ஞாயிறு) செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்,”ஆபரேஷன் டைகர் முழு வெற்றி அடைந்துவிட்டது. உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது, யாரும் கவலைப்படத் தேவையில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டியவர்கள் அதைச் செய்யட்டும்” என்று உத்தவ் தாக்கரேவை மறைமுகமாகச் சாடினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “நான் ஒரு காரியத்தை கையில் எடுத்தால் அதை முழுமையாக முடிக்காமல் விடமாட்டேன் என்பதை 2022-லேயே நிரூபித்துக் காட்டியுள்ளேன். விரைவில் உங்களுக்கு இன்னும் பல ‘பிரேக்கிங் நியூஸ்’ (Breaking News) காத்திருக்கிறது” என அடுத்தடுத்த கட்சித் தாவல்களை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்.
உத்தவ் தாக்கரே முகாமுக்கு விழுந்த பலத்த அடி
தற்போதுள்ள நிலவரப்படி, சிவசேனா (UBT) கட்சியின் 6 அதிருப்தி எம்.பி.க்களில் இருவர் ஏக்நாத் ஷிண்டேவின் அணியில் இணையப் போவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்: ஓம் பிரகாஷ் ராஜே நிம்பால்கர் (தாராஷிவ் தொகுதி எம்.பி.) நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் (ஹிங்கோலி தொகுதி எம்.பி.) தங்கள் தொகுதி மேம்பாட்டுக்கான நிதி கிடைக்காததும், கட்சித் தலைமை தங்களை நடத்திய விதமுமே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக் மற்றும் பாவுசாஹேப் வகாசௌரே ஆகிய எம்பிக்களும் விரைவில் இணைய உள்ளதாகத் தெரிகிறது.
சிவசேனாவின் உண்மையான வாரிசு யார்?
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பட்னாவிஸ், பால்தாக்கரேவின் உண்மையான சித்தாந்தத்தை ஏக்நாத் ஷிண்டே தான் முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். “சிவசேனா என்பது சொத்து அல்ல, அது ஒரு கொள்கை. சொத்துக்காக கொள்கையை கைவிட்டவர்களால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வில் மற்றும் அம்பு சின்னம் யாரிடம் உள்ளதோ, அவரே உண்மையான சிவசேனா தலைவர்” என்று கூறினார்.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்து ஆவேசமாகப் பேசிய உத்தவ் தாக்கரே, “காங்கிரஸ் கட்சி கூட இத்தனை வருடங்களாக எங்களை உடைக்க முயன்றதில்லை, ஆனால் பாஜக இந்த துரோகத்தைச் செய்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ‘ஆபரேஷன் டைகர்’ மூலமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) பலவீனமடைந்து வருவது அம்மாநில அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த உட்கட்சிப் பூசல்களும், கட்சித் தாவல்களும் யாருக்கு சாதகமாக முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
