Skip to content

தமிழ்நாட்டிலும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை; நயினார் நாகேந்திரன்

தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதற்கு கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“திருவனந்தபுரத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி”

45 ஆண்டுகளாகத் தோற்கடிக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த கேரள இடது சாரி முன்னணியை பாஜக தனித்து களம் கண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளதாக நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் பாஜக கால் பதித்துள்ளது; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கையும் கேரள பாஜக தொண்டர்களின் தொய்வில்லாத உழைப்பும்தான் காரணம் என்றும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“LDF, UDF-ன் இந்துவிரோத போக்கு மக்களுக்கு புரிந்துவிட்டது”

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே கேரளாவில் பாஜகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணி தொடங்கிவிட்டது; மாநிலம் முழுவதும் உள்ள எல்லா தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன; கமிட்டி உறுப்பினர்களுக்கு முறையாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன; அவர்கள் தினமும் மக்களைச் சந்தித்தனர் – மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றனர்-கேரள இடது சாரி முன்னணி அரசின் தோல்விகள் மக்களிடம் விளக்கப்பட்டன-இடது முன்னணி மற்றும் காங்கிரஸின் இந்து மத விரோத போக்கை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர் என நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“கேரள வெற்றி விரைவில் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும்”

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று குறிப்பிட்டுள்ள நாகேந்திரன், இங்கும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுவதாகவும் கூறியுள்ளார். அதனை நாம் முறையாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தருவோம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த வெற்றியைச் சமர்ப்பிப்போம் என்றும் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *