Skip to content

தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்… – துரை வைகோவின் அதிரடிப் பேட்டி!

புதுக்கோட்டை,டிச.31; தமிழ்நாடு அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கிய நகர்வுகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் வருகையும் திமுக கூட்டணியும்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று குறிப்பிட்ட துரை வைகோ, அவருடைய வருகையால் கணிசமான வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளதாக ஒப்புக்கொண்டார்.

“திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை.; ஆனால், எங்களைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. திமுக கூட்டணிக்கு விஜய்யின் வருகையால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது,” என்று துரை வைகோ உறுதிபடத் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளின் சின்னம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடாமல் அவரவர் சின்னங்களில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி முடிவு செய்ய வேண்டும்; 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நிலையில் கூட்டணி தலைமை இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று துரை வைகோ கேட்டுக்கொண்டார்.

’10 தொகுதிகள்’ சர்ச்சை: துரை வைகோ விளக்கம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று துரை வைகோ மறுத்தார். இருப்பினும், வரும் தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கேட்க இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *