இந்தூர், ஜன.04; மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மனதை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்து ஆண்டுகள் நீண்ட காத்திருப்பு மற்றும் வேண்டுதல்களுக்குப் பிறகு பிறந்த ஒரு ஆண் குழந்தை, அசுத்தமான குடிநீரால் உயிரிழந்திருப்பது இந்தூரில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டு காத்திருப்பும் 6 மாத கால மகிழ்ச்சியும்
இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் வசிக்கும் சாஹு குடும்பத்தினர், திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆவ்யன் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஹுசைன் தெக்ரி தர்கா உட்பட பல இடங்களுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு பிறந்த இந்தக் குழந்தை, அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி வெறும் ஆறு மாதங்களே நீடித்தது.
உயிரிழப்பிற்கு என்ன காரணம்?
குழந்தையின் பாட்டி கிருஷ்ணா சாஹு கூறுகையில், தாய்ப்பால் போதிய அளவு இல்லாததால், குழந்தைக்குப் பவுடர் பால் (Milk Powder) மற்றும் பாக்கெட் பால் கொடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பாலைத் தயாரிப்பதற்கு நகராட்சி குழாயிலிருந்து வரும் குடிநீரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்; கதறி அழும் குடும்பம்
திடீரென குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீட்டிலேயே மருந்து கொடுத்துப் பார்த்தும் பலனளிக்காத நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நகராட்சி குடிநீர் அசுத்தமாக இருந்ததே தன் பேரனின் உயிரிழப்பிற்கு காரணம் என கிருஷ்ணா சாஹு கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்.
அரசு இழப்பீட்டை நிராகரித்த குடும்பம்
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், ஆவ்யனின் குடும்பத்தினர் அந்தப் பணத்தைப் பெற மறுத்துவிட்டனர். “பணம் கொடுத்தால் என் குழந்தை மீண்டும் வந்துவிடுவானா? பணத்தை விட என் குழந்தைதான் எங்களுக்குப் பெரிது” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பாகீரத்புராவில் பரவும் மர்ம நோய்
கடந்த சில நாட்களில் பாகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரால் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறினாலும், சுகாதாரத் துறை இதுவரை 6 மரணங்களை மட்டுமே உறுதி செய்துள்ளது. 270-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரைக் கொல்லும் நஞ்சாக மாறிய குடிநீர்
குடிநீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை. அதுவே உயிரைக் கொல்லும் நஞ்சாக மாறுவது நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. 10 ஆண்டு போராட்டத்திற்குப் பின் கிடைத்த ஒரு உயிரைத் தாரைவார்த்துள்ள இச்சம்பவம், உள்ளூர் நிர்வாகங்கள் குடிநீர் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
