Skip to content

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; பிரச்னைக்கு தமிழக அரசே காரணம் எனக் கருத்து

மதுரை,ஜன.06; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று (06.01.2026) தீர்ப்பு வழங்கியது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; வழக்கின் பின்னணி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற நீதிபதி உத்தரவு

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கோவில் சார்பில் மனு

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபமேற்ற முயற்சி செய்யவில்லை எனக்கூறி தனிநபர் வழக்கு

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தூணில் தீபமேற்றலாம் என்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டது

மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று (06.01.2026) தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கோவில் நிர்வாகம் தீபமேற்ற வேண்டும்; பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது

அதன்படி,திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்படுவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூணில் தீபமேற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது; மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்ற உதவி செய்ய வேண்டும்; தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது;தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும்; திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம்; கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது;

மேலும், சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *