சென்னை, ஜன.17; சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அறிவிப்புகள் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணுதல், வேட்பாளர் தேர்வு என மும்முரமாக இயங்கி வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை நியமித்து, அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதுபோன்ற சூழலில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில்,
மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்: 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்: ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
பொங்கலுக்கு பெண்களுக்கு நல்ல சேதி வரும் என திமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக தனது முதற்கட்ட தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
