Skip to content

தேமுதிக ரூட்டை மாற்றியது எப்படி?; அதிமுக கோட்டைவிட்டது எதனால்? தவெகவுக்கு இழப்பா?

சென்னை,பிப்.20; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்துள்ளது. இத்தனை காலமும் இழுபறியாக இருந்த தேமுதிக, தற்போது ஆளும் கட்சியான திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

திமுக – தேமுதிக கூட்டணி: ஒரு வியூக மாற்றமா?

மறைந்த விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட தேமுதிக, முதல்முறையாக திமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு உறுதியானது. ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் குறிப்பிடத்தக்க சட்டமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி வியூகத்தில் தடுமாறுகிறதா அதிமுகா?

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பிரேமலதாவிற்கு தனது தம்பி சுதிஷை எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு என்கின்றன, விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த நிபந்தனையை ஏற்க மறுத்ததால் அதிமுக கூட்டணியை வேண்டாம் என நிராகரித்து, திமுக கூட்டணியில் பிரேமலதா சேர்ந்துவிட்டதாகப் பேசப்படுகிறது. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் தர திமுக மேலிடம் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்தான் அவர் திமுக கூட்டணியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தவெக-வின் நிலை என்ன?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “2026-ல் போட்டி திமுக-விற்கும் தவெக-விற்கும் தான்” என்று விஜய் தொடர்ந்து கூறிவரும் நிலையில், திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மற்ற கட்சிகள் திமுக பக்கம் திரள்வது, விஜய்யின் தவெக-விற்கு சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் களத்தின் தற்போதைய சூழல்:

திமுக: பழைய கூட்டணிக் கட்சிகளுடன் தேமுதிக-வையும் சேர்த்துக்கொண்டு வலுவான நிலையில் உள்ளது.

அதிமுக: கூட்டணிக் கட்சிகளை தக்கவைக்கப் போராடி வருகிறது.

தவெக: முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தும் எந்தக் கட்சியும் வராததால், தனித்தே களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தேமுதிகவின் சரிந்த வாக்கு வங்கி மீண்டும் வருமா?

தமிழ்நாடு அரசியலில் விஜயகாந்தின் வாக்கு வங்கி இப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது. தேமுதிக-வின் இந்த வரவு திமுக-வின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா அல்லது விஜய்யின் வருகை புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை 2026 தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். எது எப்படியோ, தமிழ்நாடு தேர்தல் களம் நாளுக்கு நாள் அரங்கேறும் விதவிதமான காட்சிகளால் அனல்பறந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *