சென்னை,மார்ச்.17; கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் உட்கட்சி அரசியலில் உழன்று கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
தவெக உருவாக என். ஆனந்த் அஸ்திவாரமாக இருந்ததால், அவருக்கு மிக முக்கியமான பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தார் விஜய்.
ஆனந்துக்கு எதிராக திட்டமிட்டு காய் நகர்த்தும் ஜான்-ஆதவ்
ஆனால், சமீபகாலமாக தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் இணைந்து ஆனந்துக்கு எதிராகத் திட்டமிட்டே காய்நகர்த்தி அவரை ஓரங்கட்டி வருகின்றனர்.
இதனால் செய்வதறியாது நிலை குலைந்து போயுள்ளது ஆனந்த் தரப்பு. இதன் உச்சக்கட்டமாக, சோழிங்கநல்லூரில் போட்டியிட விரும்பிய ஆனந்தை வலுக்கட்டாயமாக தியாகராய நகருக்கு தள்ளிவிடும் அளவுக்கு விஜய்யிடம் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டது ஜான் -ஆதவ் கூட்டணி என தவெக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.
ஆனந்த் ஆளுமையற்றவர் என விஜய்யின் காதுகளில் ஓதுகின்றனர்
என். ஆனந்துக்குக் கட்சியின் அரசியல் வியூகங்களைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை; மேடைகளில் பேசுவதற்கும் அவருக்குப் போதிய ஆளுமை இல்லை. அவருக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்தால் அது கட்சியின் ஒட்டுமொத்த தோல்விக்கே வழிவகுக்கும் என ஜான்-ஆதவ் ஜோடி விஜய்யின் காதுகளில் தொடர்ந்து ஊதி வருகின்றனர்.
இதனால் தான் சமீபகாலமாக தவெக நிகழ்ச்சிகளில் ஆனந்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதற்கிடையில், ஆனந்த் தயாரித்த வேட்பாளர் பட்டியலையும் ஜான்-ஆதவ் தரப்பு நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
விரும்பியது சோழிங்கநல்லூர், கிடைத்தது தியாகராய நகர்!
‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க ஆனந்த் விரும்புகிறார்’ என்கிற தகவலையும் பரப்பி வருவதாக அவரது தரப்பு கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, சோழிங்கநல்லூரில் போட்டியிட விரும்பிய ஆனந்தை தியாகராய நகர் தொகுதியில் முடக்கிவிட்டார்கள் எனப் பேசப்படுகிறது.
தொடக்கத்தில் ஆனந்த் எடுத்த ரகசிய சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் என தகவல் வந்திருந்தது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதாலும், ஐடி (IT) ஊழியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதாலும், அங்கு உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை அமைப்புகள் வலுவாக இருப்பதாலும் அந்தத் தொகுதியையே ஆனந்த் மலைபோல நம்பியிருந்தார்.
சோழிங்கநல்லூரில் வெற்றி வாய்ப்பு என கணக்குப்போட்ட ஆனந்த்!
மேலும், அங்கு இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியும், அதிமுக-வில் கே.பி.கந்தனுக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததும் தனக்குச் சாதகமாக அமையும் என ஆனந்த் கணக்குப் போட்டிருந்தார். ஆனால், ‘அங்கே சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணனை நிறுத்தினால்தான் சரியாக இருக்கும்; அவருக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது’ என ஆதவ் – ஜான் தரப்பு விஜய்யிடம் சொல்லியிருக்கிறது.
அம்பத்தூர் தொகுதியை குறிவைத்தார்; அதுவும் இல்லை என்றாகிவிட்டது..?
இதையடுத்து, அம்பத்தூர் தொகுதியைக் குறிவைத்து ஆனந்த் வேலை செய்தார். அங்கு அதிகமாக வசிக்கும் பட்டியலின மற்றும் கிறிஸ்தவ மக்கள் தவெக-வுக்கு வாக்களிப்பார்கள்; அதன் மூலம் எளிதில் வென்றுவிடலாம் என நம்பினார். ஆனால், அங்கேயும் ‘ஜே.சி.டி பிரபாகருக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் சரியாக இருக்கும்’ எனச் சொல்லி ஆனந்துக்கு செக் வைத்தது ஆதவ்-ஜான் தரப்பு.
திமுக பலமிழந்த தொகுதி எனக்கூறி தியாகராய நகருக்கு தள்ளிவிட்டனர்!
இறுதியில், ‘சென்னையில் திமுக பலமிழந்து இருக்கும் தொகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று; அங்கு ஆனந்தை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என எங்கள் சர்வே சொல்கிறது’ எனப் புதுக் கதையைச் சொல்லி ஆனந்தை தியாகராய நகருக்குத் தள்ளிவிட்டனர்.
ஆனால், தியாகராயநகர் தொகுதியில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது இப்போதுதான் ஆனந்துக்குத் தெரியவந்திருக்கிறது. அங்கே திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ கருணாநிதி, உதயநிதி ஆதரவாளர் ராஜ அன்பழகன் ஆகியோர் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர். கடந்த முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிமுக-வின் தியாகராயநகர் சத்யநாராயணன் கடும் சவாலாக இருப்பார்.
தியாகராய நகரில் களம்காண முட்டி மோதும் பல பிரபலங்கள்
மேலும், பாஜகவிற்கு செல்வாக்குள்ள தொகுதி என கருதப்படுவதால் தமிழிசை, எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் எனப் பலர் களமிறங்கக் காத்திருக்கின்றனர். இதனால் வெற்றிபெறுவது கடினம் என ஆனந்த் விரக்தியில் இருக்கிறார். விஜய்யைச் சந்தித்துப் பேசியும் பலன் கிடைக்காததால் அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாகப் பேசப்படுகிறது.
ஆனால், ஆனந்த் தரப்பு வட்டாரங்கள் வேறுவிதமான தகவலைக் கூறுகின்றனர். என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே பிரச்னை இருப்பதாக சிலர் திட்டமிட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக அவர்கள் கூறினர்.
தியாகராய நகரில் களம் காண்பதே ஆனந்தின் விருப்பம்: ஆதரவாளர்கள்
உண்மையில், தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஆனந்தின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. இதனை தலைமையிடம் அவர் முறைப்படி தெரிவித்தார். விஜய்யும் அதற்குப் பச்சைக்கொடி காட்டியதால், தற்போது அங்கு அவர் தீவிரமாகக் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்குள் எந்தவிதமான கோஷ்டிப் பூசலும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது, விவரமறிந்த வட்டாரம்.
ஆனால், அரங்கேறும் காட்சிகளைப் பார்க்கும்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனந்த் தரப்பு ஓரங்கட்டப்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.
