Skip to content

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் மரணத்தில் மர்மம்; நஞ்சு வைக்கப்பட்டதாக சந்தேகம் எழுப்பும் சமாஜ்வாதி கட்சி!

லக்னோ,மே.13; சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் இன்று (மே 13, புதன்கிழமை) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 38. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஒருவர் கிளப்பியுள்ள புகார் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

பிரதீக் யாதவ் திடீர் மரணம்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீக் யாதவ் (38). இவர் லக்னோவில் இன்று அதிகாலை காலமானார். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட அவர், ‘தி ஃபிட்னஸ் பிளானட்’ என்ற உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்தார். ஆரோக்கியமாக இருந்த ஒரு இளைஞர் திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரவிதாஸ் மெஹ்ரோத்ராவின் அதிரடி குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சித் தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதீக்கின் மரணம் இயற்கையானது அல்ல என்று குற்றஞ்சாட்டியுள்ளார். உடற்கூராய்வு செய்த மருத்துவர்களிடம் தான் விசாரித்ததாகவும், அவரது மரணத்திற்குக் காரணம் விஷமாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியதாகவும் மெஹ்ரோத்ரா கூறினார். மேலும், பிரதீக்கின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடும்பப் பின்னணி மற்றும் அரசியல் தொடர்பு

பிரதீக் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மாற்றாந்தாய் சகோதரர் மற்றும் பாஜக தலைவி அபர்ணா யாதவின் கணவர் ஆவார். அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், ஒரு மிகப்பெரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது மரணம் தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது.

சமீபத்திய குடும்பப் பிரச்னைகள்

சமீபத்தில் பிரதீக் தனது மனைவி அபர்ணா யாதவுடனான மணவாழ்க்கையில் கசப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அபர்ணா தனது குடும்ப உறவுகளைப் பிரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று பதிவிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிரதீக்கின் மறைவுக்குத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். லக்னோ காவல்துறையினர் தற்போது அபர்ணா யாதவின் இல்லத்திற்குச் சென்று பிரதீக்கின் கைபேசியைக் கைப்பற்றியுள்ளனர்.

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட 38 வயது இளைஞரின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக வெளிவந்தால் மட்டுமே, இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது இயற்கையான மரணமா என்பது குறித்த உண்மை நிலவரம் தெரியவரும். அதுவரை உத்தரப் பிரதேச அரசியலில் இந்தப் பதற்றம் நீடிக்கும் என பேசப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *