Skip to content

பாமக-வுக்கு ‘மாம்பழம்’ கிடையாது?; ராமதாஸ் தேர்வு செய்த பொதுச்சின்னம் ‘தலைக்கவசம்’!

சென்னை,மார்ச்.22; வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்பார்த்த அழைப்பு வராததால் கடைசி முயற்சியாக வி.கே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கைகோத்திருக்கிறார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

தேர்தலில், நான்கு முனைப் போட்டி நிலவும் என கருதப்பட்ட நிலையில், ஐந்தாவது அணியாக உருவாகியுள்ளது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் வி.கே.சசிகலா அணி.

பொதுச் சின்னத்தை தேர்வு செய்ய சிறிய கட்சிகள் தீவிரம்

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பஞ்சாயத்து ஒருபுறம் சென்று கொண்டிருக்க, மறுபுறம் மக்கள் மனதில் எளிதில் பதியும்படியான சின்னத்தை தேர்வுசெய்ய தீவிரமாக யோசித்தும் வருகின்றன.

அந்த வகையில் விகே சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

ஆனால், நீண்டகாலமாக பாமகவின் அடையாளமாக இருந்த, மருத்துவர் ராமதாஸால் உருவாக்கப்பட்ட மாம்பழம் சின்னம் தற்போது அவர் வசமில்லை; அதைப் பெறுவதற்கான சட்டப்போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்றும் தெரியவில்லை; இதனால் தேர்தலுக்கு புதிதாக வேறொரு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ராமதாஸ் ஆளாகியுள்ளார். அதற்காக அவர் தேர்வு செய்திருக்கும் பொதுச்சின்னம் தான் ‘தலைக்கவசம்’.

ஏன் ‘தலைக்கவசம்’ (Helmet) சின்னம்?

தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கூட்டணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்கக் கோரி ராமதாஸ் தரப்பு அணுகியுள்ளது. அப்படி ஒரு பொதுச் சின்னம் கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் ‘தலைக்கவசம்’ (Helmet) சின்னத்தை முன்னிறுத்த விரும்புவதாகத் தெரிகிறது. பாதுகாப்பின் அடையாளமாகவும், எளிதில் மக்களிடம் சேரும் விதமாகவும் இருக்கும் என்பதால் இந்தச் சின்னத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சிக்குள் வெடித்த அதிருப்தி

ராமதாஸின் இந்த அதிரடி முடிவுகள் கட்சிக்குள் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சசிகலாவுடன் கூட்டணி வைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என பாமக எம்எல்ஏ அருள் போன்ற முக்கிய நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது கட்சிக்குள்ளான ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாமகவை பாதுகாக்குமா ‘தலைக்கவசம்’?

சின்னம் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு கட்சியின் செல்வாக்கையும் வரலாற்றையும் தாங்கி நிற்பது. மாம்பழம் சின்னத்தை இழந்து, தலைக்கவசத்தை ஏந்தும் ராமதாஸின் இந்த முயற்சி தேர்தலில் வெற்றியைத் தருமா அல்லது பின்னடைவை ஏற்படுத்துமா என்பது மக்களின் வாக்குகளிலேயே அடங்கியுள்ளது. எது எப்படியோ, இன்றைய யுகத்தில் எந்த சின்னமும் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *