சென்னை,மார்ச்.26; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. போட்டியிடும் தொகுதிகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன, அரசியல் கட்சிகள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை நேற்று (மார்ச் 25,2026) தொடங்கிவிட்டார்.
இதேபோன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முக்கிய தேதிகள் ஒரு பார்வை
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்டப் பரபரப்பில் உள்ளது.
திமுக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக., விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வரை முடிவாகியுள்ள தொகுதிப் பங்கீடு விவரம்:
திமுக: 165* தொகுதிகள்
காங்கிரஸ்: 28 தொகுதிகள்
தேமுதிக: 10 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் (VCK): 8 தொகுதிகள்
கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI & CPM): தலா 5 தொகுதிகள்
மதிமுக: 4 தொகுதிகள்
இதர கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பது குறித்த இறுதிப் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
திருவாரூரில் தொடக்கம் – கொளத்தூரில் நிறைவு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை ஏப்ரல் 2-ம் தேதி தனது சொந்த தந்தை மு.கருணாநிதியின் சொந்த மண்ணான திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சுமார் 20 நாட்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் அவர், ஏப்ரல் 21-ம் தேதி தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பரப்புரையை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை
வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை திமுக-வின்வேட்பாளர் பட்டியல் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் இந்த அறிக்கையில் முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது.
அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் எனப் பலமுனைப் போட்டி நிலவும் இந்த 2026 தேர்தலில், ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கைத் தக்கவைக்கத் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முதலமைச்சரின் இந்தப் பரப்புரைப் பயணம் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
