சென்னை,ஏப்.13; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பரப்புரைக் களத்தில் பிரதமர் மோடி – ராகுல் காந்தி எங்கே?
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பரப்புரை செய்துள்ளார். மேலும், நாளை மறுதினம் (ஏப்ரல் 15, புதன்கிழமை) நாகர்கோவிலும், 18-ம் தேதி கோவையிலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.
மறுபுறம், திமுக தலைமையிலான கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மறுதினம் (ஏப்ரல் 15, புதன்) சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடமிருந்து இன்னும் முறையான பதில் வராததால் திமுக மேலிடத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே விரிசலா?
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதே இரு கட்சிகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்து, பின்னர் முடிவுக்கு வந்தது. ஒருகட்டத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய காங்கிரஸ் தலைமை ஆலோசித்ததாகவும், அதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்த நிலையில் சோனியா காந்தி தடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் புதுச்சேரியில் ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒரே நாளில் பரப்புரையில் ஈடுபட்டபோதும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. இது கூட்டணியில் நிலவும் விரிசலை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
ராகுலை அழைக்கத் துடிக்கும் திமுக
ராகுல் காந்தியை எப்படியாவது தமிழ்நாடு பரப்புரைக்கு வரவழைக்க திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் இது குறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் கமல்ஹாசன் மூலம் அவருக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ராகுல் வருவாரா? மாட்டாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி
தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பரப்புரைக்கு வருமாரா? மாட்டாரா> என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ராகுல் வரவில்லை எனில், அது திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி சேலம் கூட்டத்தில் பங்கேற்பாரா அல்லது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
