ஜபல்பூர்,மே.02; மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 30, 2026) ‘நர்மதா குயின்’ (Narmada Queen) என்ற சொகுசுப் படகில் 40 சுற்றுலாப் பயணிகள் சென்றனர்.
அந்தப் படகு பார்கி அணை நீர்த்தேக்கத்தில் சென்று கொண்டிரு்தபோது, மாலை 6 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் புயல் வீசியது. இதனால் நிலைதடுமாறிய படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், சுற்றுலாப் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
9 பேர் ஆற்றில் மூழ்கி பலி; 28 பேர் மீட்பு
சிறிது நேரத்தில் தண்ணீர் புகுந்து படகு ஆற்றில் மூழ்கியது. உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியின் விளைவாக 4 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று மேலும் 5 பேரின் உடல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆனது. ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் கார்வேந்தன், காமராஜின் மைத்துனர் வேந்தனின் மனைவி சௌபாக்கியவதி, அவரது மகள் ஆகிய 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் திருச்சி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் இயக்கப்பட்ட படகு
படகில் ஏறுவதற்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை அணியும்படி யாரும் கூறவில்லை என்று உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.
மஞ்சள் எச்சரிக்கை அலட்சியம்: வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Alert) விடுத்திருந்தது. இருப்பினும், சுற்றுலாத் துறையினர் படகை இயக்க அனுமதித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டுஎச்ச
இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலம் அதிகாரிகளின் பெரும் அலட்சியத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பூட்டப்பட்ட லைஃப் ஜாக்கெட்டுகள்: படகில் ஏறும் முன் பயணிகளுக்கு உயிர் காக்கும் உடைகள் (Life Jackets) வழங்கப்படவில்லை. அவை படகின் கீழ்தளத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடைசி நேரப் பதற்றம்: படகு கவிழும் நிலையில் இருந்தபோதுதான் ஊழியர்கள் ஜாக்கெட்டுகளை எடுக்க முயன்றனர். இது பயணிகளிடையே பெரும் குழப்பத்தையும் தள்ளுமுள்ளுவையும் ஏற்படுத்தியது.
உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சர் நடவடிக்கை; இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இதுபோன்ற துயரங்களுக்குக் காரணமாகிறது. முறையான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டிருந்தால் அல்லது வானிலை எச்சரிக்கையை மதித்து படகு நிறுத்தப்பட்டிருந்தால், இந்த 9 உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இனிவரும் காலங்களிலாவது இது போன்ற அலட்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.