சென்னை,மே.06; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஒரு கட்சி ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தவெக-வை ஆட்சியமைக்க ஆளுநர் இன்று அழைப்பார்?
இருப்பினும், தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் தவெக-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
அதன்படி, விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று, ஆளுநர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு மேலும் 12 இடங்கள் தேவைப்படுகிறது. 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினமாகும்.
ஆட்சியமைக்க ஆதரவுகோரி திரைமறைவில் தவெக பேச்சு?
தனித்துப் போட்டியிட்டதால் தவெகவுக்கு வேறு கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும்.
தமிழக வெற்றிக் கழகம் வெளிப்படையாக எந்தக் கட்சியிடமும் ஆதரவு கேட்கவில்லை என்ற போதிலும், திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தவெக-வுக்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவா?
இதனிடையே, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்திட அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று (மே 6, 2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு முதன்முறையாக இன்று காலை கூடவிருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவெக-வுக்கு ஆதரவு; அதிமுகவில் இபிஎஸ்-க்கு நெருக்கடி
தவெக-வை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் நிலவும் உள்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவாக மாறக்கூடும், அல்லது அந்தக் கட்சியிலே சேரக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படக்கூட வாய்ப்பிருப்பதாக அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.
